பிஎப்.7 வகை கொரோனா வைரஸ் சீனாவை போல் இந்தியாவில் வேகம் காட்டுமா? – ஆதார் பூனாவல்லா விளக்கம்
பிஎப்.7 வகை கொரோனா வைரஸ் சீனாவை போல் இந்தியாவில் வேகம் காட்டுமா? – ஆதார் பூனாவல்லா விளக்கம்
மும்பை: சீனாவில் வேகமாக
பரவி வரும் ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது.
இது சீனாவை போல் இந்தியாவிலும் வேகமாக பரவுமா? இல்லையா? என்பதற்கு கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரேனா வைரஸ் உருமாறி உருமாறி பல நாடுகளை தாக்கியது. இதில் இந்தியாவும் அதிக பாதிப்பை சந்தித்தது.
இருப்பினும் கடந்த ஓராண்டுகளாக இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சீனாவில் பரவும் பிஎப் 7 வகை வைரஸ்
இந்நிலையில் தான் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது வீரியமாக பரவ தொடங்கி உள்ளது. அதன்படி கொரோனாவின் பூர்வீகம் என கூறப்படும் சீனாவில் தான் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சீனாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்பு என்பது உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளது. இதற்கு ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் பரவல் தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவிலும் கண்டறியப்பட்ட
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தான் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளவும் அட்வைஸ் வழங்கி உள்ளது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரிக்க செய்யும் பிஎப் 7 ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.
4 பேருக்கு பிஎப் 7 வகை பாதிப்பு
இன்று இரவு 9 மணி நிலவரப்படி இந்தியாவில் 4 பேர் ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி குஜராத்தில் 2 பேர், ஒடிசாவில் 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வேகம் காட்டுமா?
இந்த ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வைரஸ் என்பது சீனாவில் தடுப்பூசி செலுத்தியவர்களை தாக்கி உள்ளது. தற்போது இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிஎப் 7 வகை வைரஸ் என்பது இந்தியாவிலும் வேகமாக பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?, தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் சீனாவில் பரவும் கொரோனா மற்றும் இந்தியாவில் நுழைந்த பிஎப்7 வகை ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் பற்றி கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‛‛சீனாவில் கொரேனாா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நமது தடுப்பூசி சிறந்தது, பாதுகாப்பானது. இதனை கருத்தில் கொண்டோம் என்றால் நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத்துறை வழங்கும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக நாம் பின்பற்ற வேண்டும்” என்றார்.
முன்னதாக இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
இதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதோடு கொரோனா பரவல் என்பது இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
அதோடு கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.