டெல்லியை திணறடிக்கும் பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுலுடன் இன்று ‛கை’கோர்த்த கமல்ஹாசன் உற்சாகம்!
டெல்லியை திணறடிக்கும் பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுலுடன் இன்று ‛கை’கோர்த்த கமல்ஹாசன் உற்சாகம்!
டெல்லி:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பி யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வருகிறார்.
இந்த யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்த நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் கைகோர்த்துள்ளார்.
இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, 2024 தேர்தலுக்கான கூட்டணி அச்சாரமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக ராகுல் காந்தி இந்தியாவில் நடைப்பயணத்தை துவக்கி உள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரைரை ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரை
இந்த பாரத் ஜோடோ யாத்திரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி துவக்கினார்.
இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது 100 நாட்களை கடந்த இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து இன்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்த யாத்திரைக்கு நடிகர், நடிகைகள், சமூக சேவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். இதுததவிர காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந் நிலையில் தான் தலைநகர் டெல்லியில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும்படி நாட்டில் உள்ள பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சியினருக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுதினார். இதற்காக கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் டெல்லி சென்றுள்ளனர். நேற்று மாலை கமல்ஹாசன் டெல்லி பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ளார்.
கமல்ஹாசன் அழைப்பு
முன்னதாக நேற்று கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய கமல்ஹாசன், ‛‛உயிரே, உறவே, தமிழே வணக்கம்.. ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் என்னை பெலோ சிட்டிசன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக, இழந்து கொண்டிருக்கும் மாண்பை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முன்னெடுப்பில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24, 2022 நான் உங்களிடத்தில் வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம், நாளை நமதே..ஜெய்ஹிந்த்” என பேசியிருந்தார்.
தேசிய அளவில் கவனம்
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் நேற்று பங்கேற்றது தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு இந்தியாவின் முன்னணி நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் கமல்ஹாசன் இருப்பது தான் காரணமாகும். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதிய மய்யத்தை துவக்கி தனித்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கமல்ஹாசன் திடீரென்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க உள்ளார்.
இதனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில தமிழக அரசியலிலும் ராகுல் காந்தி, கமல்ஹாசன் ஆகியோரின் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.