நெருங்கி வரும் புயல்! கொட்டத் தொடங்கிய கனமழை – நாகையிலிருந்து 330 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நெருங்கி வரும் புயல்! கொட்டத் தொடங்கிய கனமழை – நாகையிலிருந்து 330 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் மழை பெய்ய தொடங்கி இருக்கும் நிலையில், நாகையில் இருந்து 330 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக 8 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் நிலைகொண்டு உள்ளது.
6 மணி நேரமாக மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த மண்டலம், மணி 12 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 8 கிலோ மீட்டராக குறைந்து இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து சென்று இன்று நண்பகல் இலங்கை கடலோர பகுதிக்கு அருகில் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும். இதன் காரணமாக தமிழ்நாட்டை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காலை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.