கொரோனாபரவல்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு!
கொரோனாபரவல்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு!
திருப்பதி:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் ஜனவரி 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தின் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத்தொடங்கிய போது லாக்டவுன் விதிக்கப்பட்டது. கோவில்கள் மூடப்பட்டன. திருப்பதி கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு பக்தர்கள் திருப்பதிக்கு வருவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர்.
அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்துகின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.
கொரோனா காலத்தில உண்டியல் வருமானம் ஆண்டுக்கு 1000 கோடியை எட்டவில்லை.
இந்த ஆண்டு உண்டியலில் வருமானமாக கடந்த 11 மாதத்தில் 1200 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 2 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுவதை முன்னிட்டு 10 நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்திற்காக இன்று முதல் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் விரைவு தரிசன டிக்கெட் பெற்று சொர்க்கவாசல் வழியாக சென்றுசாமி தரிசனம் செய்யலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்ய 300 டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி அவசியம் என்று கூறப்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ளனர்.