இந்தியை திணிப்பது அறிவீனம்- திணிக்கப்படுபவற்றை எதிர்ப்போம் – கமல்ஹாசன்
இந்தியை திணிப்பது அறிவீனம்-
திணிக்கப்படுபவற்றை எதிர்ப்போம் – கமல்ஹாசன்
சென்னை:
இந்தியை திணிப்பது அறிவீனம், திணிப்பதை எதிர்ப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயமானது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில் கமல்ஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு என்பது மத்திய அரசின் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தி திணிப்பு நடவடிக்கைகளை இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
தென்னிந்தியா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான உச்சமாக, திராவிட நாடு முழக்கங்களை கேரளா, கர்நாடகா எழுப்பியதும் கூட அண்மைய வரலாறு.
ராஜ்யசபாவில் பேசிய கேரளா எம்பி ஜான் பிரிட்டாஸ் இந்தி திணிப்புக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார்.
அந்த உரையில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா? என கேள்வி எழுப்பி இருந்தார் ஜான் பிரிட்டாஸ்.
ஜான் பிரிட்டாஸின் இந்த பேச்ச சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த உரையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம்.
நடிகர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறது. ராகுல் காந்தியின் தற்போதைய பாதயாத்திரையில் டெல்லியில் பங்கேற்றார் கமல்ஹாசன். ராகுல் காந்தி தமது ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆவேசமாக பேசியிருந்தார். ஆங்கிலம்தான் உலகத்துடனான இணைப்பு மொழியாக இருக்க முடியும் என வாதிட்டிருந்தார்.
அதேபோல் திமுகவும் அதன் முன்னோடியான நீதிக் கட்சி காலம் தொடங்கி 100 ஆண்டுகளாக இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.
தாளமுத்து நடராசன் தொடங்கி இன்றளவும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது திமுக- காங்கிரஸுடன் கமல்ஹாசன் இணையக் கூடும் என்கிற நிலையில் அவரும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.