பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை – முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி
பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை – முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி
“பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய ராகுல் காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன்” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 109-வது நாளான கடந்த 24-ம் தேதி டெல்லியை எட்டியது.
அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
அதன் பின்னர், கிறிஸ்துமஸ் – புத்தாண்டையொட்டி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த இடைவேளைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் டெல்லியிலிருந்து தொடங்குகிறது.
இந் நிலையில், ராகுல்காந்தியின் ஓந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரை சென்றடையும்போது அந்த யாத்திரையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
“காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல்காந்தியுடன் பங்கேற்க எனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு வணங்குகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய ராகுல்காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.