சென்னை: கோரிக்கையை ஏற்றார் ஸ்டாலின் பொங்கல் பரிசுடன் கரும்பு!
சென்னை: கோரிக்கையை ஏற்றார் ஸ்டாலின் பொங்கல் பரிசுடன் கரும்பு!
விவசாயிகளுக்கு முதல்வர் இனிப்பு அறிவிப்பு
சென்னை:
பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன், கரும்பு, வெல்லம், முந்திரி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக அரசு நல்ல விலைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் அதனை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் பண்டிகையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் வழங்க கேட்டு டிசம்பர் 24ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 2ஆம் தேதிதிங்கட் கிழமை க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் செங்கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் ஜனவரி 9ஆம் தேதியன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என்றும் கூறினார்.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை நாளில் இனிப்பான செய்தி கூறிய முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் நன்றி கூறி வருகின்றனர்.