மீண்டும் டி ஷர்ட் சர்ச்சை: கிழிந்த ஆடையில் உள்ள ஏழை குழந்தைகளை தெரியவில்லையா – ராகுல் காந்தி
மீண்டும் டி ஷர்ட் சர்ச்சை: கிழிந்த ஆடையில் உள்ள ஏழை குழந்தைகளை தெரியவில்லையா – ராகுல் காந்தி
லக்னோ:
இந்திய ஒற்றுமை யாத்திரையில் தான் அணிந்து இருக்கும் டீ சர்ட் குறித்து பேசுபவர்களின் கண்களுக்கு, இந்த குளிர் காலத்தில் கிழிந்த ஆடையுடன் அவதிப்படும் ஏழை குழந்தைகளை தெரியவில்லையா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி கேள்வி எழுப்பி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் அவர் இவ்வாறு கூறினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர்,
“இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நான் டி ஷர்ட் அணிந்து இருப்பது சர்ச்சையான விசயமாக்கப்பட்டு வருகிறது.
இந்த பனி காலத்தில் ஏழை விவசாயிகளும், ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளும் கிழந்த ஆடையுடன் இருக்கிறார்களே. அதுபோன்ற பல குழந்தைகள் என்னோடு இந்த யாத்திரையில் உடன் வந்தார்கள்.
ஏழை குழந்தைகள்
கடுமையான குளிரை தாங்கிக்கொள்ளும் அளவில் அதற்கு ஏற்ற ஆடை இல்லாமல் இருக்கும் அவர்களை பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லை. நான் டி ஷர்ட் அணிவது உண்மையான பிரச்சனை கிடையாது. இந்த கடும் குளிரிலும் கதகதப்பான ஆடை அணிய முடியாமல் ஏழை குழந்தைகள் கஷ்டப்படுவதுதான் உண்மையான பிரச்சனை. அதை பற்றி ஏன் ஊடகங்கள் பேசுவது இல்லை” என கேள்வி எழுப்பினார்
நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக 10 டிகிரிக்கும் குறைவாக இரவு நேரங்களில் குளிர் உள்ளது. மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் மக்களை குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று முன் தினம் பேசிய பிரியங்கா காந்தி ‘ராகுல் காந்தி உண்மை என்னும் கவசத்தை அணிந்து இருப்பதால் அவரால் இந்த கடும் குளிர் காலத்திலும் குளிரை உணர முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.’ என தெரிவித்தார்
ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி சர்ட் தொடர்பாக அவர் கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரை தொடங்கியதில் இருந்தே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தியை கடந்த செப்டம்பர் மாதம் சந்தித்து பேசினர்.
அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என புகைப்படத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது.
ஒற்றுமை யாத்திரை
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தலைநகர் டெல்லிக்கு வந்தார்.
110 வது நாளாக அவர் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தில் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.