இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ அனுமதி கொடுக்குறதுக்கு நீங்க யாரு? மோகன் பாகவத்தை விளாசிய ஓவைசி!
இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ அனுமதி கொடுக்குறதுக்கு நீங்க யாரு? மோகன் பாகவத்தை விளாசிய ஓவைசி!
டெல்லி: இந்தியா இந்துஸ்தானாகவே இருக்கும்; ஆனால் முஸ்லிம்களும் இங்கு அச்சமின்றி வாழலாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லிம் வாழ்ந்து கொள்ளலாம் என அனுமதி கொடுப்பதற்கு மோகன் பாகவத் யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், முஸ்லிம்கள் இந்தியராக இருப்பதற்கு நிபந்தனை போடும் அளவுக்கு மோகன் பாகவத்துக்கு துணிச்சல் வந்துவிட்டதா என்றும் அவர் வினவியுள்ளார்.
முஸ்லிம்களை சீண்டியமோகன்பாகவத்
டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோகன் பாகவத் முஸ்லிம்களை சீண்டும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில்:
‘இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து ராஷ்டிரமாகவே இந்தியா இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்தியாவில் முஸ்லிம்களும் அச்சமின்றி வாழலாம். அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஆனால், சில விஷயங்களை முஸ்லிம்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
“பெருமை பேசாதீர்கள்”
தேவையில்லாமல் தங்களின் பெருமைகள் குறித்தும், வரலாறு குறித்தும் முஸ்லிம்கள் தம்பட்டம் அடிக்கக் கூடாது. உதாரணமாக, ‘நாமே உயர்ந்தவர்கள்’, ‘ஒருகாலத்தில் இந்தியாவை நாம் ஆண்டோம்; மீண்டும் நாம் ஆளுவோம், நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். அதனால்தான் நம்மால் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை’ என்பன போன்ற பேச்சுகளை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்’ என மோகன் பாகவத் கூறியிருந்தார்.
கொதித்தெழுந்த ஒவைசி
இந்நிலையில், மோகன் பாகவத்தின் இந்த பேச்சுக்கு அசாதுதின் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்களும் இந்தியாவில் வாழலாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு அனுமதி கொடுக்க மோகன் பாகவத் யார்? எங்கள் மார்க்கத்தை பின்பற்ற ஒப்புதல் அளிக்க மோகன் பாகவத்துக்கு என்ன உரிமை இருக்கிறது?
“அவ்வளவு துணிச்சலா?”
நாங்கள் (முஸ்லிம்கள்) இந்தியர்கள். அல்லாவின் விருப்பத்தின் பேரில் நாங்கள் இந்தியர்களாக இருக்கிறோம். முஸ்லிம்கள் இந்தியர்களாக இருக்க நிபந்தனை விதிக்கும் அளவுக்கு மோகன் பாகவத்துக்கு துணிச்சல் வந்துவிட்டதா? நாங்கள் எங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுத்து இங்கு வாழ வரவில்லை. எங்கள் மார்க்கத்தை பின்பற்ற நாக்பூரில் இருக்கும் சில சன்னியாசிகளின் அனுமதியை பெற வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
வசுதெய்வக் குடும்பம் (உலக மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம்) என்ற வார்த்தையை கூட உச்சரிக்க உங்களுக்கு தகுதியில்லை. சொந்த நாட்டு மக்களை ஜாதியாலும், மதத்தாலும் பிரிக்கும் நீங்கள், வசுதெய்வக் குடும்பம் என்றெல்லாம் பேசாதீர்கள்’ என அசாதுதின் ஒவைசி கூறியுள்ளார்