யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: திருமாவளவன்
யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: தொல் திருமாவளவன்
சென்னை:
யார் வேண்டுமானாலும் பாஜக கட்சியில் கூட இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான இயக்கம்.
தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள். அவர்களை யார் விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் இருப்பதை படிக்காமல் விட்டுவிட்டார்.
மேலும், தன்னிச்சையாக தன்னுடைய கருத்துக்களை பேசியிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உடனே எழுந்து ஆளுநர் பேசிய தனிப்பட்ட கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்
இதையடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக, ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணியை கட்சியினர் சட்டப்பேரவைக்குள்ளேயே முழக்கமிட்டனர். அந்த முழக்கத்தையும் மீறி ஆளுநர் ரவி தன்னுடைய சொந்த கருத்தை பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆளுநரை கண்டித்தும் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விசிக இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியது
இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா கலந்து கொண்டனர்.
மேலும், திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் விசிக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திருமாவளவன் எம்பி உள்பட 500 க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் அழைத்து செல்லப்பட்டனர்.
திருமாவளவனின் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
முன்னதாக, முத்தரசன் பேசும்போது:
ஆளுநராக பொறுப்பேற்றபோது தமிழ்நாடு ஆளுநராகிய நான் என்று தானே பொறுப்பேற்றார். ஆனால் இப்போது தமிழ்நாடு வேண்டாமா?
சென்னாரெட்டி
தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தது போன்ற ஆளுநரின் செயலானது மிகவும் கண்டிக்க கூடிய செயலாக அமைந்திருந்தது.
இப்போதுகூட ஆளுநர் எதுக்காக டெல்லிக்கு போய் இருக்கிறார் என்று தெரியவில்லை ஒருவேளை, மோடி, அமித்ஷாவை சந்தித்து, ‘நீங்கள் சொன்ன மாதிரியே நான் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கின்றேன் ஆனால் தனக்கு வரும் எதிர்ப்பினால் என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்று சொல்ல தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
வடிகட்டிய ஆர்எஸ்எஸ்
இதையடுத்து, திருமாவளவன் பேசம்போது, மம்தா பானர்ஜியும் ஆளுநர் இல்லாமல் சட்டசபையை நடத்தி காட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் சென்னாரெட்டி இல்லாமலேயே சட்டப்பேரவையை ஜெயலலிதா அம்மையாரும் நடத்தி காட்டி உள்ளார். எனவே, ஜெயலலிதா போல, தற்போதும் ஆளுநர் இன்றி சட்டப்பேரவையை நடத்த வேண்டும்.
வடமாநிலங்களில் 4, 5 முறை தேர்தலில் வெற்றியை பெற்றும், இங்கே தமிழகத்தில் 10 பேரைகூட தமிழக சட்டசபைக்கு பாஜக வால் அனுப்ப முடியவில்லை.
அந்த அளவுக்கு தமிழ்நாடு, பாஜக அரசியலுக்கு எதிரான இறுக்கத்தை கொணடிருக்கிற ஒரு மாநிலம். அவர்களின் அரசியல் இங்கே எடுபடாத அளவுக்கு திராவிட அரசியல் என்பது ஆளுமை செலுத்துகிறது.
திராவிட அரசியலை திமுக. அதிமுக என்று மட்டும் பார்த்துவிட கூடாது.
ஆளுநர் சட்டசபையில் செய்த செயல் மட்டும் பிரச்சனை இல்லை. இவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆனதுதான் தான் முக்கிய பிரச்சனையே. ஆளுநர் ஒரு வடிகட்டிய ஆர்எஸ்எஸ் தொண்டர். அவர் பேசும் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளிலும் சனாதனம் என்பது ஒலித்து கொண்டே இருக்கிறது..
ஆளுநருக்கான தனி அதிகாரம் கிடையாது, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கீழ் தான் அவரது செயல் இருக்க வேண்டும்.. ஆளுநராக நியமிக்கபட்டவர் அரசியல் கட்சியாளராக செயல் படக்கூடாது. ஆனால் அவர் முழுமையாக அரசியல்வாதியாக மட்டும் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். யார் வேண்டுமானாலும் பாஜக கட்சியில் இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான இயக்கம் தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள் யார் அவர்களை விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்றார் திருமாவளவன்.