திருவண்ணாமலை: திமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை: திமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு
திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தின் வளா்ச்சிக்கு என்னென்ன பணிகளை செய்துள்ளேன் என்பது இன்னும் 2 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தெரிய வரும் என செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்
மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், பொங்கல் பரிசுகள் வழங்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.
பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கியதுடன், ஆலோசனைகளையும் வழங்கிப் பேசினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
“கடந்த திமுக ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.
குறிப்பாக, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, கலசப்பாக்கம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி, வந்தவாசியில் கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் எந்த புதிய பணிகள் செய்தாலும் அதில் ஒரு பணியை திருவண்ணாமலை மாவட்டத்துக்கென கேட்டு வாங்கி வருகிறேன்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பணிகளுக்கான கருத்துரு உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடும் நிலையில் உள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் இந்தப் பணிகள் எல்லாம் செய்து முடிக்கப்படும். அப்போது, மாவட்டத்தின் வளா்ச்சிக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது பொதுமக்களுக்குத் தெரிய வரும்” என்றாா்.
திமுக மாநில செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட துணைச் செயலாளர் ப.விஜயரங்கன், நகரச் செயலாளர் ப.காா்த்திவேல்மாறன், ஆகியோா் உடனிருந்தனா்.