சிறை நூலகங்களுக்காக 34,232 தானமாக பெறப்பட்ட புத்தகங்கள்!
சிறை நூலகங்களுக்காக 34,232 தானமாக பெறப்பட்ட புத்தகங்கள்!
சென்னை:
சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறை நூலகங்களுக்காக 34,232 புத்தகங்கள் தானமாகப்பெறப்பட்டுள்ளது.
அவற்றை மத்திய சிறைகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் புழல், புழல் 2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், நல்வழிப்படுத்துவதற்காகவும் போதனை வகுப்புகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், புத்தக வாசிப்பு மூலம் கைதிகளுக்குள் விரைவில் மனமாற்றத்தைக் கொண்டு வர முடியும் என சிறைத்துறையின் புதிய டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.
எனவே அதற்கேற்ப அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள நூலகங்களில் உலக அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நீதி நெறி நூல்கள், நன்னடத்தை வழிகாட்டி புத்தகங்கள் போன்றவற்றை அதிகளவில் வைத்து, அவற்றை கைதிகள் வாசிக்க வைக்கவும், இதற்கு தேவையான புத்தகங்களை பொதுமக்களின் பங்களிப்புடன் பெறவும் சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு தமிழக அரசின் நூலகத்துறையும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக சென்னை புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்தி, கைதிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து புத்தகம் சேகரிக்கும் முயற்சியை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டது.
இதற்காக புத்தக கண்காட்சி வளாகத்தில் தனி அரங்கம் அமைத்து டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தக சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, திரைப்பட நடிகர்கள் பார்த்தீபன், தம்பி ராமையா, பாக்கியராஜ், கவிஞர் வைரமுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை வழங்கினர்.
இதன் மூலம் கடந்த 6 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 34 ஆயிரத்து 232 புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு தானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
அவற்றை தலைப்பு வாரியாக பிரித்து, அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடுத்தகட்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடனும் இணைந்து சிறை நூலகங்களுக்கான புத்தக சேகரிப்பில் ஈடுபடுவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.