தமிழ்நாடு அமைதி பூங்காவா? இல்லையா? ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கில் பரபரப்பு வாதம் தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அமைதி பூங்காவா? இல்லையா? ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கில் பரபரப்பு வாதம்
தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது ஆர்எஸ்எஸ் தரப்பும், காவல்துறை தரப்பும் பரபரப்பான வாதங்களை முன்வைத்தன.
‛‛ஒருபுறம் அமைதி பூங்கா என கூறிவிட்டு மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என காவல் துறை அனுமதி மறுக்கிறது”என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்ட நிலையில் ‛‛தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதாகவும், அமைதி பூங்காகவே திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். உளவுத்துறை தகவல் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டது” என காவல்துறை தரப்பு பரபரப்பான வாதங்கள் செய்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.
பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது.
தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு மனுக்கள்
இதனை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதாவது சுற்றுச்சுவருக்குள் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது உள் அரங்குகளிலும் அணிவகுப்பை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது.
இன்று பரபரப்பான விசாரணை
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்று ஒத்திவைத்திருந்தனர்.
ஆர்எஸ்எஸ் தரப்பு வாதம்
இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ‛‛இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உகந்தது.
பிஎப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று எந்த ஆதாரங்களும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் பிற அமைப்புகளுக்கு 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரட்டை நிலைப்பாடு
ஒருபுறம் அமைதி பூங்கா என கூறிவிட்டு மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என காவல் துறை அனுமதி மறுக்கிறது.
இதில் அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்பட்டது.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட கூறப்பட்டது” என ஆர்எஸ்எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதம்
இதையடுத்து அரசு சார்பில் (காவல்துறை)ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,
“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கடந்த நவம்பர் 6ம் தேதி உயர் நீதிமன்றம் ஊர்வலம் நடத்த அனுமதித்தும் அவர்கள் தான் ஊர்வலத்தை ரத்து செய்தார்கள். அரசு அனுமதி மறுக்கவில்லை. மேலும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்படாது என அவர்களே அறிவித்தனர். இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது மாநில அரசின் கடமை தான். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். 500 இடங்களில் போராட்டங்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியபோதும் கூட அனுமதி வழங்கப்படவில்லை.
ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சை தொடர்ந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் அவர்களாகவே வீடுகளில் குண்டுகளை வீசிவிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தியாக தெரிவித்தார்.
உளவுத்துறை தகவல்
அதோடு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தான் காவல் துறை செயல்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது என்றும் அமைதி பூங்காவாகவே திகழ வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ , ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறிப்பிட்ட மத சார்புடையதாக இருந்தாலும், அனைத்து மத உரிமைகளையும் பாதுகாக்க கூடிய அரசாகத்தான் தமிழ்நாடு அரசு உள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவது அவர்களது உரிமை அந்த உரிமையை மறுக்கவில்லை. அதேவேளையில் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதனால் தமிழ்நாடு அரசு உள்ளதாக அனைத்து விதிகளையும் பின்பற்றி அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிப்பார்கள்” என வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்புஅனைத்து வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.