பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல்- போலீஸ் குவிப்பு
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல்- போலீஸ் குவிப்பு
பிரதமர் மோடி குஜராத் 2002 படுகொலை தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப் படம் புதுச்சேரி பல்கலை கழகத்தில் திரையிடப்பட்டது.
புதுச்சேரி:
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தால் புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல் வெடித்தது. இதனால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பில் இந்து கரசேவகர்கள் உயிரிழந்தனர். இது திட்டமிட்ட வன்முறை என கூறி மதமோதல் உருவெடுத்தது. இந்த மதமோதலில் 1,000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
உலக நாடுகளை உலுக்கியது இந்த குஜராத் இனப்படுகொலை. அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் பிரதமர் மோடி.
தற்போது குஜராத் படுகொலைகள், பிரதமர் மோடி மையமாக வைத்து பிபிசி ஊடகம் ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளது.
இது பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது என்பதால் இந்த ஆவணப் படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.
யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை நாடு முழுவதும் திரையிட்டு வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது.
அப்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. இதேபோல் டெல்லி ஜே.என்.யூ, ஜாமியா பல்கலை கழகங்களிலும் மோடி குறித்த ஆவணப்படத்தால் மோதலும் சர்ச்சையும் வெடித்தது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் போட்டி போட்டுக் கொண்டு இந்த ஆவணப்படத்தை பிரதானமாக திரையிட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும் மோடி குறித்த ஆவணப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னையில் பொது இடத்தில் அனுமதியின்றி ஒன்று கூடி மோடி ஆவணப்படத்தை திரையிட முயன்றதாக சிபிஎம் பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் புதுச்சேரியிலும் மோடி ஆவணப்படம் சர்ச்சையாகி இருக்கிறது. மத்திய பாஜக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச பல்கலை கழகத்தில் இப்படம் திரையிடப்படும் என ஒருதரப்பு மாணவர்கள் அறிவித்தனர். இதற்கு மற்றொரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
முன்னெச்சரிக்கையாக அப்பல்கலைக் கழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் மாணவர்களோ லேப்டாப், செல்போனில் மோடி குறித்த ஆவணப்படத்தை பார்த்தனர். இதற்கு எதிராக பாஜக ஆதரவு மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சூழ்நிலையால் விடிய விடிய அப்பல்கலைக் கழக வளாகம் பெரும் பதற்றத்தில் இருந்தது.