பிபிசியின் ஆவணப்பட சர்ச்சை: சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் திட்டம்!
பிபிசியின் ஆவணப்பட சர்ச்சை: சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் திட்டம்!
சென்னை:
டெல்லி ஜாமிய மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்றதையடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
குஜராத் கலவரம் குறித்து பிபிசி இயக்கியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தை இன்று மாலை சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிடப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், இந்த கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் ‘India: The Modi Question’ எனும் ஆவணப்படத்தை இயக்கியது.
இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்தாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த படம் அரசுக்கு எதிரான பிரசார படம் என்று மத்திய அரசின் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு தடை விதித்தது.
இந்த தடையை யடுத்து டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆவணப்படத்தை ‘இந்திய மாணவர் சங்கத்தினர்’ (SFI) கேரளாவில் பல்வேறு கல்வி நிலையங்களிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும், ஜேஎன்யு பல்கலையிலும் திரையிட்டனர். ஜேஎன்யுவில் இந்த திரையிடலுக்கு பல்கலைகழக நிர்வாகம் அனுமதி மறுத்தது.
அனுமதியை மீறி திரையிட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் இந்த படத்தை திரையிட்டனர். இதற்கிடையில் இந்த மாணவர்கள் மீது கற்கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் இந்த படத்தை திரையிட முற்பட்டதாக கூறி SFI மாணவர் சங்கத்தை சேர்ந்த 13 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தது.
இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆன பின்னரும் விடுவிக்கப்படாததால் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி தலைமையில் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்ட அவர்கள் தங்கள் மொபைலில் India: The Modi Question ஆவணப்படத்தை பார்த்தனர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்
இதனையடுத்து நேற்றிரவு சென்னை பிரசிடென்சி கல்லூரியின் விக்டோரியா விடுதியில் SFI மாணவர்கள் இந்த திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.
அதேபோல சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக அரங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆவணப்படம் திரையிடப்படும் என்று SFI கூறியுள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்கள், பொது இடங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிடவும் திட்டமிட்டுள்ளது.
இதே போல நாடு முழுவதும் இந்த படத்தை கொண்டு சேர்க்க SFI திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் SFI-ன் முயற்சியை தடுக்கும் நோக்கில் ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பான ABVP வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதாவது இரு தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் SFI மாணவர்கள் India: The Modi Question ஆவணப்படத்தை திரையிட்டனர். இதில் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் SIF-ன் முயற்சிக்கு மாற்றாக ABVP அமைப்பினர் ‘The Kashmir Files’ திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.