“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
“இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தன்று மதச்சார்பற்ற சந்திப்பு மற்றும் அரசியலமைப்புப் பாதுகாப்பு மாநாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பினராயி விஜயன், “சங்பரிவாரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாகச் சித்திரிக்கின்றன.
இந்தியாவை இந்துராஷ்டிரா வாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். மேலும், மத்தியில் ஆட்சியிலிருப்பவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத அரசியல் குழுவைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் நம் நாட்டின் வேர்கள், ஜனநாயகம், அரசியலமைப்பின்மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும்
அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டால், ஒரு தனி மனிதனின் கண்ணியம் முதல் நாட்டின் இறையாண்மை வரை அனைத்தும் இழக்கப்படும். எனவே, இது போன்ற செயல்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.