பாரத் ஜோடோ யாத்திரை 12 மாநிலங்களைக் கடந்து, காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது
பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி, கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
பாரத் ஜோடோ யாத்திரை ஐந்து மாதங்களில் 12 மாநிலங்களைக் கடந்து, காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இன்று (30-01-2023) நிறைவடைந்தது.
இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மகராஷ்டிரா ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது.
யாத்திரையின் இறுதிநாளான இன்று காலை முதலே ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு நிலவியது. அதையும் பொருட்படுத்தாமல், இறுதிநாள் நிகழ்வு ஸ்ரீநகரில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன், 12 மாநில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபெற்றனர். தி.மு.க சார்பில் ராஜ்ய சபா உறுப்பினர் திருச்சி சிவா பங்கு பெற்றார்.
இந் நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “காஷ்மீரில் என்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று என்னைப் பலர் எச்சரித்தனர். ஆனால், காஷ்மீர் மக்கள் எனக்குக் கையெறி குண்டுகளைக் கொடுக்கவில்லை, மாறாக இதயம் நிறைய அன்பைக் கொடுத்தனர்.
பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களால் இதுபோல இங்கு நடமாட முடியாது. அவர்கள் பயப்படுவார்கள். இந்தப் பயணத்தின்போது கடுமையான கால்வலியால் அவதிப்பட்டேன். யாத்திரையை நிறைவு செய்ய முடியுமா என்று பயந்தேன். அப்போது ஒரு சிறுமி கொடுத்த கடிதத்தின் உந்துதலால், இதுவரை வந்திருக்கிறேன்.
ஒருநாள் யாத்திரையின்போது நான்கு சிறுமிகள் என்னருகே ஓடி வந்தனர். அவர்களைக் கட்டி அணைத்தேன். அவர்கள் குளிரில் நடுங்குவதை உணர்ந்தேன். அவர்களின் வலியை உணர, நானும் ஸ்வெட்டர் அணிவதை விட்டேன்.
புல்வாமா தாக்குதலில் தங்களின் உறவினர்களை இழந்தவர்களின் வலியை உணர முடிகிறது. அவர்களின் வலியைப் புரிந்துகொண்டேன்.
மோடி ஜி, அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு அந்த வலி புரியாது.
நான் பாரத் ஜோடோ யாத்திரையை எனக்காகவோ அல்லது காங்கிரஸ் கட்சிக்காகவோ தொடங்கவில்லை.
பாரத் ஜோடோ யாத்திரை
இந்த தேசம் இயங்குவதற்கு அடித்தளமாக இருக்கும் கொள்கைகளைச் சிதைக்க நினைப்பவர்களுக்கு எதிராகவே இந்த யாத்திரையைத் தொடங்கினேன். இது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக அல்ல. இந்த யாத்திரை, மக்களிடம் வெறுப்புணர்வைப் பரப்புவோருக்கு எதிரானது” என்றார்.