வாக்கெடுப்பு மட்டும் இல்லையென்றால் நாம் விசா இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைய முடியாது!
வாக்கெடுப்பு மட்டும் இல்லையென்றால் நாம் விசா இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைய முடியாது!
பிரெஞ்சு காலனித்துவ கட்
டிடக்கலை, அழகிய ரம்மியமான கடற்கரைகள், துடிப்பான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங், வித விதமான ஷாப்பிங், பிரமிக்க வைக்கும் தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் என “மினி கோவா” என்று செல்லமாக அழைக்கப்படும் புதுச்சேரி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
ஆனால் புதுச்சேரியில் உள்ள கீழூர் எனும் கிராமம் மட்டும் இல்லையென்றால் இன்று நாம் பாஸ்போர்ட், விசா உடன் புதுவைக்கு உள்ளே காலடி எடுத்து வைக்க முடியும்.
ஆம் அங்கு தான் புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பிரான்ஸுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு எடுக்கப்பட்டதாம்!
சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் புதுச்சேரி
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில், திருக்காஞ்சி சிவன் கோவில், பெருமாள் கோவில்கள், பல்வேறு மசூதிகள்,தேவாலயங்கள், அரவிந்தர் ஆசிரமம், பிரஞ்சு கால கட்டிடங்கள், ராக் பீச், போதி பீச், பாரடைஸ் பீச், ஆரோவில் உலகத்தர நகரம், பல்வேறு சுவாரஸ்யமான உணவகங்கள், இரவு பார்ட்டி நடக்கும் பப்கள், வண்ணமயமான ஷாப்பிங் என சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சாய்ஸ்கள் உள்ளன.
ஆனால் இங்கு வரும் எவருக்கும் இந்த ஒரு சுவாரஸ்யமான இடத்தை பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்காது.
ஆம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் புதுச்சேரியின் கீழூர் கிராமத்திற்கும் அப்படி ஒரு உன்னதமான தொடர்பு இருக்கிறதாம்.
கீழுர் கிராமத்தில் வாக்கெடுப்பு
பாண்டிச்சேரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தின் கீழ் அமைந்துள்ள கீழூர் கிராமம் மூவாயிரம் பேர் வசிக்கும் ஒரு சின்ன கிராமமாகும்.
1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் பாண்டிச்சேரி, பிரான்ஸ் நாட்டின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வந்தது.
தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் 18 அக்டோபர் 1954 இல் இந்த கீழுர் கிராமத்தில் தான் பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் கீழ் இணைய வேண்டுமா அல்லது இந்திய அரசாங்கம் கீழ் இணைய வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தியாவுடன் இணைவதற்கு வாக்கெடுப்பு
பிரதிநிதிகள் சபை மற்றும் முனிசிபல் கவுன்சில்கள் கூடி 178 நபர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களே ஒட்டு அளிப்பதற்கு தகுதியானவர்கள். அதன்படி புதுச்சேரியின் எதிர்கால நலன் கருதி 170 பேர் பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் எனவும் 8 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒட்டுகள் அளித்தனர்.
பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
அதன்படி புதிய மாநிலத்தின் முதல் உயர் ஆணையர் கேவல் சிங் மற்றும் பிரெஞ்சு குடியரசு அரசாங்கத்தின் சிறப்பு தூதரகப் பிரதிநிதியான பியர் லாண்டி ஆகியோர் ஆளுநரின் அதிகாரப் பரிமாற்ற விழாவில் கையொப்பங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக கீழூர் கிராமத்தில் ஒரு மண்டபமும் அது சார்ந்த ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் ஒட்டு அளித்த 178 நபர்களின் பெயர்களும் இங்குள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதோடு அன்றிருந்த தலைவர்களின் பெயர்கள், ஆளுநர் பெயர், பிரஞ்சு அதிகாரிகளின் பெயர்களும், அன்று நடந்த நிகழ்வை தெளிவாக விளக்கும் வகையில் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு பிரான்ஸுக்கு சாதகமாக அமைந்திருந்தால், இன்று பாண்டிச்சேரி பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தனி நாடாக இருந்து இருக்கும்.
நாமும் பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமல் அதனுள் காலடி எடுத்து வைத்திருக்க முடியாமல் போய் இருந்து இருக்கும்.
நீங்கள் அடுத்து எப்போது புதுவைக்கு சென்றாலும் இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை பார்த்து விட்டு வாருங்களேன்!
தகவல்: native planet