ஈரோடு கிழக்கு தேர்தல்: உடைந்தது அதிமுக இபிஎஸ் அணி- பாஜக உறவு! தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி உதயம்!
ஈரோடு கிழக்கு தேர்தல்: உடைந்தது அதிமுக இபிஎஸ் அணி- பாஜக உறவு! தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி உதயம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக இபிஎஸ் அணி வெளியேறி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக இபிஎஸ் அணி வெளியேறியது.
அதிமுக இபிஎஸ் அணி தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி உருவாகி உள்ளது.
அதிமுக இபிஎஸ் அணிக்கு உரிய நேரத்தில் பதில் தருவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இன்று அதிமுக இபிஎஸ் அணி அறிவித்தது.
2 முறை எம்.எல்.ஏ.வாக தென்னரசுவை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அதிமுக இபிஎஸ் அணி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த தேர்தல் பணிமனைதான் இப்போது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் இந்த தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலானது தேசிய ஜனநாயக கூட்டணி. ஆனால் அதிமுக இபிஎஸ் அணி உருவாக்கி இருப்பது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி. அதாவது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக தேர்தல் பணிமனை மூலம் அறிவித்துள்ளது அதிமுக இபிஎஸ் அணி.
மேலும் இந்த பணிமனை முகப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் பாஜகவை குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படம் இடம்பெறவில்லை.
மேலும் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என அறிவித்த இதர கூட்டணி தலைவர்களான ஜான்பாண்டியன் ஏசி சண்முகம் ஆகியோரது படங்களும் இடம்பெறவில்லை.
அதிமுக இபிஎஸ் அணியை ஆதரிப்பதாக அறிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக இபிஎஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இது தமிழ்நாடு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இபிஎஸ் அணிக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என்றார்.