டெல்லி: வேட்பாளரை பொதுக்குழுவே முடிவு செய்யும்.. தீர்ப்பால் எடப்பாடி vs ஓபிஎஸ் யாருக்கு சாதகம்?
டெல்லி: வேட்பாளரை பொதுக்குழுவே முடிவு செய்யும்.. தீர்ப்பால் எடப்பாடி vs ஓபிஎஸ் யாருக்கு சாதகம்?
டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அந்த பொது வேட்பாளரை பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த தீர்ப்பு எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரில் யாருக்கு ஆதரவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இதில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், இப்போதும் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நான் கையொப்பம் இடத்தயார். பொது வேட்பாளரை நிறுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள தயார்.
சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பொதுவாக ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கண்டிப்பாக அதை ஆதரிக்க நான் தயார். பி பார்மில் நான் கையெழுத்து போட தயார், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது. இதை அடுத்து நீதிபதிகள், பொது வேட்பாளரை ஏன் நிறுத்த கூடாது. இரண்டு தரப்பிற்கும் ஏற்ற வேட்பாளரை ஏன் நிறுத்த கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு எடப்பாடி தரப்பு, இல்லை.. அது முடியாது.. தென்னரசுவே பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்தான் என்று வாதம் வைத்தது.
ஆனால் நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெற வேண்டும் . வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இந்த தீர்ப்பின் விளக்கத்தை பார்க்கலாம்.
1. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டுவதா அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் கூட்டுவதா? 15 நாட்களுக்கு முன் பொதுக்குழுவை கூட்டுவதா? என்ற சந்தேகங்களுக்கு இப்போது செல்ல வேண்டியது இல்லை. ஏனென்றால் பொதுக்குழுவை தேர்தல் ஆணையம்தான் கூட்ட சொல்லி உள்ளது.
2. எனவே இது நீதிமன்றம் கூட்டும் பொதுக்குழு. எனவே அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இதற்கான கடிதத்தை அளிப்பார்.
3. இதில் ஓ பன்னீர்செல்வம், , வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் கலந்து கொள்வர். ஆனால் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளரா வெறும் உறுப்பினராக கலந்து கொள்வாரா என்று கூறப்படவில்லை.
4. ஓ.பி.எஸ் எந்த பதவிக்கு கீழ் கலந்து கொண்டாலும், அவருக்கு கொஞ்சம் சிக்கல்தான். ஏனென்றால் இறுதியில் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும் என்றுதான் நீதிபதிகள் கூறி உள்ளனர். அதனால் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்து இதில் முக்கியம் இல்லை.
5.இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழுவில் எத்தனை வாக்குகள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்திலுக்கு எத்தனை பொதுக்குழுவில் வாக்குகள் என்பதுதான் இறுதியில் முக்கியத்துவம் பெறும். அதில் அதிக வாக்குகள் பெற்றவரை பொது வேட்பாளராக அறிவித்து, அதில் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடுவார். அவர் போடும் கையெழுத்தே இப்போது முக்கியம்.
6. பொதுக்குழு எடப்பாடி பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். அதுவே ஓ பன்னீர்செல்வம் பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர்.
7. இவர் பொது வேட்பாளர் என்பதால் இரட்டை இலை அவருக்கே கிடைக்கும். சின்னம் முடங்காது.
உச்சநீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு பின்னடைவு, ஓபிஎஸ்சுக்கு வெற்றி!