இபிஎஸ் பொறுப்பு என்ன? பதவியில் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம்.. ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
இபிஎஸ் பொறுப்பு என்ன? பதவியில் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம்.. ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு என்ன என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக வேட்பாளரை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்து வரும் பதவி என்ன என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதே போல் எந்தவொரு பதவியும் வகிக்காத எடப்பாடி பழனிசாமி எப்படி வேட்பாளரை முன்மொழிய முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் தரப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் வேட்பாளர் தேர்வுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால், கடிதம் மூலம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் படிவங்களை அனுப்பி வைக்கும் பணிகளை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்.
அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் படிவம் நேற்றே தொடங்கினாலும், இன்று காலை வரை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கு அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பி வைத்தார்.
தென்னரசை ஆதரிப்பாரா ஓபிஎஸ்?
தொடர்ந்து, மாலை 7 மணிக்குள் அதிமுக வேட்பாளர் குறித்து பதில் அளிக்க தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசே வேட்பாளராக முன்மொழியப்பட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தென்னரசை வேட்பாளராக ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே அதிமுக வேட்பாளர் தேர்வு படிவத்தில் வேட்பாளரை முன் மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறிப்பிடப்படவில்லை என்றும், அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் எந்தவொரு பதவியிலும் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர தடை விதிக்கவில்லை.
அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருப்பதால், அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.