ஈரோடு தேர்தல்: அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: தமிழ் மகன் உசேனை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
ஏ, பி படிவங்களில் கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: அதிமுக வேட்பாளருக்கான ஏபி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவும், ஓபிஎஸ் தரப்பில் எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகன் என்பவரும் அறிவிக்கப்பட்டனர்.
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்தன. இதனால், அக்கட்சிக்கு இரட்டைஇலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய உத்தரவிட்டது.
பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் அதிமுக வேட்பாளர் விவரத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று சமர்பித்தார்.
அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அளித்த பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏ, பி படிவங்களில் கையெழுத்திட
அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் அங்கீகரிக்கப்படுகிறார்.
குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.
இதன்படி, தேவையான நடவடிக்கைகளை ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தமிழ் மகன் உசேனுக்கு ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அங்கீகாரம் கொடுத்து இருப்பதால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கே எஸ் தென்னரசுவே வேட்பாளராக நிற்க பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து இருப்பதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பாஜகவும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்ற கருத்தை கூறி வருகிறது.
இதனால், பாஜகவும் நாளை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கும் என்று தெரிகிறது.
ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான செந்தில் முருகனும் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என ஓபிஎஸ் தரப்பினரும் கூறியிருக்கின்றனர். மொத்தத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே நடந்த மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே தற்போது வெற்றி கிடைத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளரை அறிவித்துள்ளன.
அதிமுக தரப்பில் கே.எஸ் தென்னரசு நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டாலும் திமுக கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறக்க உள்ளது.