நீங்கியது அதிமுக குழப்பம்! இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் தென்னரசு.. சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல்
நீங்கியது அதிமுக குழப்பம்!
இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் தென்னரசு.. சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட எடப்பாடி தரப்பு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார்.
அவரைத் தவிர அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.. கடந்த ஜன. 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கி விட்ட போதிலும், அதிமுக தரப்பில் தொடர்ந்து குழப்பம் நீடித்தே வந்தது.
அதிமுக இப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த இடைத்தேர்தலில் முதலில் இரு தரப்பும் வேட்பாளரை அறிவித்தன.
எடப்பாடி தரப்பில் தென்னரசு இந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது
இப்படி இரு தரப்பும் அதிமுக வேட்பாளர்கள் என்று அறிவித்ததால், சின்னமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிகமாக அதிகாரம் தரப்பட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை நேற்று தேர்தல் ஆணையத்திடம் தமிழ்மகன் உசேன் தாக்கல் செய்தார்.
இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
தன்னால் இரட்டை இலை சின்ன முடங்கக் கூடாது என்று ஓபிஎஸ் கருதுவதாகவும் இந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பெருந்தன்மையுடன் ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்தார்.
அது மட்டுமின்றி இரட்டை இலைக்காகப் பிரசாரம் செய்வோம் என்றும் அவர் அறிவித்தார்.
இதன் பின்னரே அதிமுகவில் சற்று குழப்பம் நீங்கியுள்ளது. இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
அதிமுக சார்பில் விண்ணப்பத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பம் தீர்ந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக – காங்கிரஸ் என்ற சூழல் உருவாகியுள்ளது.