பாஜக வளருதுன்னு சொன்னா போதுமா? தமிழகத்தில் தனித்து போட்டியிடணுமில்ல! – சுப்பிரமணியன் சுவாமி
பாஜக வளருதுன்னு சொன்னா போதுமா தனித்து போட்டியிடணுமில்ல! – சுப்பிரமணியன் சுவாமி
சென்னை:
தமிழகத்தில் பாஜக வளர்கிறது என சொன்னால் மட்டும் போதுமா, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால்தானே தெரியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே பாஜக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் மிகப் பெரிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் பாஜக போட்டியிடவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அது போல் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட வேண்டும்.
எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும். அப்போதுதான் பாஜக வளர்வதாக அர்த்தம்.
பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர் நிதியமைச்சர் என நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது சுப்பிரமணியன் சுவாமி திருப்பதியில் பேசிய போது தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்றார்.
அது போல் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு ட்வீட் போட்டியிருந்தார். அதில் தமிழகத்தில் திமுகவை எதிர்ப்பதற்கு நான் ஒருத்தர் மட்டும் இருப்பதாகவே தெரிகிறது. திமுகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டிகள். முதல்வர் ஸ்டாலின் கர்ஜித்தால் இந்த பூனைக்குட்டிகள் மியாவ் என மட்டும் சொல்கின்றன. சினிமா கலாச்சாரத்தால் தமிழக பாஜக சீரழிந்துவிட்டது என தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் தமிழக பாஜகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.