ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு “கை” கொடுக்கும் கமல்ஹாசன் 3 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு “கை” கொடுக்கும் கமல்ஹாசன் 3 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார்.
பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம்தமிழர் கட்சியினர் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு திரட்டினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகமான ஆழ்வார்போட்டையில் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தங்களின் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் அழைத்திருக்கிறோம் என்றும் இளங்கோவன் கூறினார்.
இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார் எனது நண்பரும் பெரியாரின் பேரனுமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிக்குழுவையும் கமல்ஹாசன் அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. திமுகவின் 11 அமைச்சர்களை உள்ளடக்கிய பெரும் படையே களமிறங்கி உள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24,25 ஆம் தேதிகளில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசன் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் கடந்த சட்டசபை தேர்தலில் தனி அணியாக சரத்குமாருடன் இணைந்து களமிறங்கினார் கமல்ஹாசன். முதல் முறையாக தேசிய கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யப்போகிறார்.
2024 லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலில் கூட்டணியை மாற்றி களமிறங்குகிறார் கமல்ஹாசன்.