ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முறைகேடு புகாரால் அறிக்கை கேட்கும் இந்திய தேர்தல் ஆணையம்!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: அறிக்கை கேட்கும் இந்திய தேர்தல் ஆணையம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8,000 பேரின் பெயர்கள் 2 முறை இடம்பெற்றிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில் தான் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார்.
இவர் கடந்த மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு தேர்தல்.. திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்! என்ன காரணம்
திமுக தீவிர பிரசாரம்
2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் என்பது திமுகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதாவது கடந்த 21 மாத ஆட்சியில் திமுக ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சியினரை காட்டிலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
11 அமைச்சர்கள் உள்பட எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க அதிமுகவில் நிலவிய குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உள்ளது.
எப்படியாவது தென்னரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பெரும் பட்டாளமே ஈரோடு கிழக்கில் களமிறங்கி வாக்கு சேகரித்து வருகிறது.
இதேபோல் தேமுதிக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகளும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.
அதிமுக சார்பில் முறைகேடு புகார்
இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக தொடர்நது குற்றம்சாட்டி வருகிறது.
வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ள அதிமுக புகார் தெரிவித்தது.
மேலும் அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியான சிவி சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‛ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களில் 40 ஆயிரம் பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை.
மேலும் சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.
இது தேர்தலில் முறைகேட்டை ஏற்படுத்தும். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
அதிமுக சார்பில் அளித்த புகாரை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது. இந்நிலையில் தான் அந்த புகார் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான புகார் பற்றி ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த உத்தரவால் முறைகேடு புகார் குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஈரோடு கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி ஆய்வு மேற்கொண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் உரிய தகவல்களை அளிப்பார்.
இதன் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.
இதனால் இந்த உத்தரவு என்பது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.