குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுத்தீர்களா? பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி!
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுத்தீர்களா? பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி!
குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை ஏன் வழங்கவில்லை என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வரும்,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதேபோல் அதிமுகவின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் வேலையை திமுக செய்து வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து மூன்றாவது நாளாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்:
அதிமுக ஆட்சியில் தான் ஈரோடு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
அன்றைய நாள் முதல் ஈரோடு மாவட்டத்திற்கு குடிநீர், மருத்துவமனை, சாலை என்று பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களில் எந்த பணிகளும் செய்யப்படவில்லை.
வாக்காளர்களை சந்திக்க தெரு தெருவாக வரும் அமைச்சர்களை நிறுத்தி, என்ன திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்புங்கள். அதிமுக ஆட்சியில் நல்லது செய்ததால், நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் வந்து வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால் 21 மாதத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி வாக்கு பெற திமுக திட்டமிட்டுள்ளது.
ஆனால் ஒருபோதும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள். ஏனென்றால் இது இடைத்தேர்தல். ஆட்சிக்கு மக்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு, ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வாக்காளர்களை அழைத்து சென்று கொட்டகை போட்டு அடைத்து வைக்கிறார்கள். இதுபோல் எங்கும் நடந்ததில்லை.
வேட்பாளர்கள் யார் வேண்டுமானாலும் வாக்காளர்களை சந்திக்கும் நிலையே அதிமுகவில் ஆட்சியின் போது இருந்தது. ஒருபோதும் இடைத்தேர்தலை அதிமுக அரசியலாக பயன்படுத்தவில்லை.
ஆனால் ஈரோட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், பணம் கொடுத்து வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளார்கள்.
திருமணத்தில் சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், திருமணம் எப்படி நிற்காதோ, அதுபோல் வாக்காளர்களை அடைத்து வைத்தாலும் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இனி வாக்காளர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கேயே நேரடியாக சென்று வாக்கு சேகரிப்போம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கும் வேலையை தான் திமுக செய்து வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்தது மட்டுமே திமுக ஆட்சியின் சாதனை. அதேபோல் எழுதாத பேனாவுக்கு கடலில் சிலை வைக்க முயற்சிக்கிறார்கள். ரூ.81 கோடி மக்கள் வரிப்பணத்தில் பேனாவுக்கு சிலை வைக்க இருக்கிறார்கள்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் அவ்வளவு எதிர்ப்பு வந்தும், பேனாவை வைத்தே தீருவேன் என்று முயற்சிக்கிறார்கள். பேனாவுக்கு நினைவிடம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அண்ணா அறிவாலயம், நினைவிடத்தில் பேனாவுக்கு சிலை வைக்கலாம். கடலில் வைப்பதையும், ரூ.81 கோடி செலவில் வைப்பதை மட்டுமே தவறாக சொல்கிறோம்.
பொதுத்தேர்தலின் போது சுமார் 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் முக்கிய அறிவிப்புகள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, கேஸ் மானியம் என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சித்தார்.