‛மய்யம்’ என்பது நடுநிலை அல்ல ஈரோடு கிழக்கு பிரசாரத்தில் கமல்!
‛மய்யம்’ என்பது நடுநிலை அல்ல ஈரோடு கிழக்கு பிரசாரத்தில் கமல்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாக்குகள் சேகரித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார்.
அரசியலில் தனித்துவமாக செயல்பட வேண்டும் என களமிறங்கிய கமல் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சமீபகாலமாக கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கூறப்பட்டது. மாறாக மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கும் என்ற தகவல் வெளியானது.
அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என கமல்ஹாசன் அறிவித்தார்.
மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று அவர் ஈரோடு கிழக்கில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்ததாவது,
‛‛ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை(நேற்று) வருகிறேன் ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்” என பதிவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கமல்ஹாசன் பேசுகையில்:
” நான் ஒவ்வொரு முறையும் உயிரே, உறவே, தமிழே என கூறும்போது மக்கள் நீதி மய்யத்தின் தோழர்கள் அனைவரையும் அது குறிக்கும். இப்போது மய்யம் வாதம் என்பது எந்த பக்கமும் சாயாமல் நடுவில் இருப்பது அல்ல. கொள்கைகளை ஒதுக்கிவிட்டு மக்களின் நலன் என வரும்போது எது நியாயமோ அதை செய்வது தான் மய்யத்தின் லட்சியம். அதனை தான் செய்து கொண்டிருக்கிறேன்.
லாபத்துக்காகவோ இல்லை
இந்த பேச்சு சரளமாக வருவதற்கு காரணம் ஒத்திகை அல்ல. நான் யோசித்து பேசுகிறேன். பலமுறை யோசித்து தான் இங்கு வந்திருக்கிறோம். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என கூட்டணிக்கு வந்துள்ளேன். பல விமர்சனங்களை கேட்டுவிட்டு சரியான பாதை என்று தான் இங்கு வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் என் பாதை உங்களுக்கு புரியும்” என்றார்.