விசிக தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்தார் காயத்ரி ரகுராம்!
விசிக தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்தார் காயத்ரி ரகுராம்!
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த நிலையில் விசிக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் சேருவது குறித்து பரிசீலனை செய்வேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று காயத்ரி ரகுராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளனை சந்தித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சந்திப்பின் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நடன இயக்குனராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இவருக்கு தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார்.
பாஜகவில் இருந்து விலகல்
இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.
தற்போது பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள காயத்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று காயத்ரி ரகுராம் சென்றார்.
அங்கு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். புத்தகம் வழங்கி அவரை தொல் திருமாவளவன் வரவேற்றார்.
இந்த சந்திப்பு சிறிது நேரம் நடந்தது. அதன்பிறகு அங்கிருந்து காயத்ரி ரகுராம் புறப்பட்டு சென்றார்.
இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சந்திப்பு குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‛‛எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது விசிக தலைவர், எம்பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருமாவளவனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காயத்ரி ரகுராம் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தார்” என போட்டோவுடன் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அப்போது அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சியில் இணைய கூப்பிட்டாலும் செல்வேன். ஆனால் எனக்கு பாதுகாப்பு தருவதாகவும் சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது விசிக தலைவர் திருமாவளவனுடன் அவர் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் விசிகவில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்திப்புக்கான காரணம் என்ன?
இந்த சந்திப்பின் பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காயத்ரி கடந்த மாதம் 27 ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சக்தி யாத்திரை செல்ல முடிவு செய்திருந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த யாத்திரையை ஏப்ரல் 14ம் தேதிக்கு அவர் மாற்றி உள்ளார்.
ஏப்ரல் 14 என்பது சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளாகும். இந்நிலையில் தான் யாத்திரையில் பங்கேற்க வர வேண்டும் என காயத்ரி ரகுராம் கேட்டு கொள்ளும் நோக்கத்தில் இந்த சந்திப்பை அவர் நிகழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.