டெல்லி: மனீஷ் சிசோடியா கைது ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்!
டெல்லி: மனீஷ் சிசோடியா கைது ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்!
நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
டெல்லி முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.
மனீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி அமைச்சர்களுக்குள் ஒருவரான சத்யேந்தர் ஜெயினை கடந்தாண்டு மே மாதம், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
அவர் சிறையில் இருந்து வந்த நிலையிலும், டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இந் நிலையில், கைதான சத்யேந்தர் சிங், மனீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள் இருவரின் ராஜினாமாவையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
தற்போது, இருவரின் ராஜினாமாவை அடுத்து, ஆம் ஆத்மிக்கு மற்றொரு சோதனை காத்திருக்கிறது எனலாம்.
கைதான முக்கிய தலைவர்கள் இருவருக்கும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இது டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மிக்கு கூடுதல் அழுத்ததை அளிக்கலாம். தற்போது, டெல்லி உள்ளாட்சி ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், எதிர்கட்சியான பாஜக தரப்பில் கடும் நெருக்கடி உருவாகலாம் என கூறப்படுகிறது.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் துறைகள், டெல்லி அமைச்சர்களாக உள்ள கைலாஷ் கெஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்படலாம்.
புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, டெல்லி துணைநிலை ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வந்தது.
அதன்படி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டும், விசாரிக்கப்பட்டும் வரும் நிலையில், ஏற்கெனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
நேற்றைய தினம் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு ஐந்து நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை முதல் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் சிபிஐ-ன் கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மணிஷ் சிசோடியா தரப்பு கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்றைய தினமே மனு மீது விசாரணையை நடத்துவதாக அறிவித்திருக்கிறது.