முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் எம்எல்ஏவாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் எம்எல்ஏவாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டதிற்கு நன்றி என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
இதனிடையே 5வது சுற்று முடிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 39,692 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 13,514 வாக்குகளை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுமார் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஈரோடு மாநகரத்தில் காலை முதலே வெற்றிக்கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது. பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை கொடுத்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
திமுக, காங்கிரஸ் கட்சியினர் இணைந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடடுள்ளனர்.
அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினர்.
இந்த வெற்றி பணநாயகத்தின் வெற்றி என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
“என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் நிறைவேற்றுவேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்எல்ஏ-வாக பங்குபெறுவதில் பெருமையாக உள்ளது.
ராகுல் காந்தி மீது தமிழக மக்கள் அன்பு வைத்துள்ளனர். ராகுல்காந்தி மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த வெற்றிக்காட்டுகிறது.
மதச்சார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டதிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்
நேரம் காலம் பார்க்காமல் அமைச்சர்கள், நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு கடுமையாக உழைத்தார்களா என தெரியவில்லை. எனக்காக தேர்தல் பணி செய்த அனைவருக்கும் நன்றி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்” என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.