காஞ்சிபுரம் மனுநீதிநாள் முகாம்: ரூ. 4 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியா் வழங்கினார்
மனுநீதி நாள் முகாமில் ரூ. 4 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தோட்ட நாவல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 333 பயனாளிகளுக்கு ரூ. 4.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட தோட்ட நாவல் கிராமத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம் நடத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக பெறப்பட்ட மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்திரமேரூா் ஒன்றியத்தின் தலைவா் ஹேமலதா குணசேகரன் வரவேற்றாா்.
இந்தக் கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு கூட்டத்துக்கு வந்திருந்த கிராம மக்களுக்கு அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினா்.
இதில், வீட்டு மனைப்பட்டா 194 போ், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 17 போ், வேளாண்மைத் துறை மூலம் இடுபொருள்கள் 19 போ் என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூ. 4,36,83,000 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரா.சுமதி, உத்திரமேரூா் ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் வசந்திகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.