ராகுலுக்கு நிபந்தனை ஜாமீன்: 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
ராகுலுக்கு நிபந்தனை ஜாமீன்:
2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மார்ச் 23 ஆம் தேதி விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நேற்று சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது.
அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டது.
சூரத் நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளின் விவரம்:-
ராகுலுக்கு மார்ச் 23 ஆம் தேதி விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு மனு விசாரித்து முடிக்கும் வரை ராகுலுக்கு ரூ.15 ஆயிரம் பிணை தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
எந்த ஒரு குற்றத்திற்காக ஜாமீன் வழங்கப்பட்டதோ, அதே போன்று அவதூறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது.
மேல்முறையீடு மனு விசாரணையின் போது மனுதாரர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும். நிபந்தனைகளை மனுதாரர் ராகுல் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.