நாடு முழுவதும் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று: 11 பேர் பரிதாப பலி
நாடு முழுவதும் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று: 11 பேர் பரிதாப பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பரிசோதனைகளை அதிகப்படுத்த அரசு அறிவுறுத்தல்
இது தொடர்பாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
மொத்தம் 31,194 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் இதுவரை நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,47,51,259 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிராவில் 3 பேரும் கேரளா, டெல்லியில் தலா 2 பேரும் சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேஷ், சண்டிகர், உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,30,954 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது,
“8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
கர்நாடகா, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, அரியானாவில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
எனவே மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உறுதிசெய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் ஏப்ரல் 10, 11-இல் அவசரகால ஒத்திகை நடத்த வேண்டும்.
10 லட்சம் பேருக்கு 100 பரிசோதனைகள் என்ற தற்போதைய விகிதத்தில் இருந்து பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.