டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியின் புதிய கலால் கொள்கை (டெல்லி கலால் கொள்கை 2021-22) ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி சென்றுள்ளது.
அதாவது டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அவரையும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரிடம் விசாரணை நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 16 ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தலைமையகத்துக்கு சிபிஐ அழைத்துள்ளது.
இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.
இதனுடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில் இன்று மாலை 6 மணிக்கு (ஏப்ரல் 14)பத்திரிக்கையாளர் சந்திப்பு
கெஜ்ரிவாலை கைது செய்ய சதி நடக்கிறது: சஞ்சய் சிங்
முதலமைச்சருக்கு சிபிஐ அளித்துள்ள நோட்டீசைக் கண்டு, கட்சியோ, கெஜ்ரிவாலோ பயப்படப் போவதில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
சிபிஐ நோட்டீஸின் பேரில், முதல்வர் ஏப்ரல் 16 ஆம் தேதி நேரில் ஆஜராவார் என்று சஞ்சய் சிங் கூறினார்.
டெல்லி சட்டசபையில் பிரதமர் மற்றும் அவரது நண்பர் (அதானி) தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பேசி வருவதால், கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்த நோட்டீஸ் வந்துள்ளது என்றார். கெஜ்ரிவாலை கைது செய்ய சதி நடக்கிறது எனவும் கூறினார்.
டெல்லி அரசின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதி, திகார் சிறையில் விசாரணைக்குப் பிறகு, கலால் கொள்கை வழக்கில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. சிபிஐ வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
அக்டோபர் 2022 இல், டெல்லியில் உள்ள ஜோர் பாக் மதுபான விநியோகஸ்தர் இன்டோஸ்பிரிட் குழுமத்தின் நிர்வாக இயக்குனரான சமீர் மகேந்திருவை கைது செய்த பின்னர், டெல்லி மற்றும் பஞ்சாபில் சுமார் மூன்று டஜன் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவரை கைது செய்தது. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையையும் இந்த வார தொடக்கத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
டெல்லியில் மதுபானக் கலால் கொள்கையை திருத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகவும், உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதில் உரிமக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது.
டெண்டர்தாரருக்கு சுமார் 30 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திருப்பித் தர, நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராக கலால் துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொள்கையால் அரசு கருவூலத்துக்கு ரூ.144.36 கோடி இழப்பு ஏற்பட்டது. டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரையின் பேரில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.