FEATURED

உத்தரப் பிரதேசம்: முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது போலீஸ் காவலில் சுட்டுக் கொலை 3 பேர் சரண்

உத்தரப் பிரதேசம்: முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது போலீஸ் காவலில் சுட்டுக் கொலை 3 பேர் சரண்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் அவர்கள் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூன்று பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல்.

அதோடு இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.

நேற்று சனிக்கிழமை ஏப்ரல் 15 பின்னிரவு நேரத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர்.

இருவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

அந்த சமயத்தில் அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களை போல மைக், கேமரா என கூட்டத்தோடு கூட்டமாக சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேர் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர்.

தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டுள்ளனர்.

திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அத்திக் அகமதுவை மிக அருகில் (பாயிண்ட் பிளாங்க்) குறிவைத்து சுட்டு வீழ்த்தியது தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க அத்திக் அகமதுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர் உடன் இருந்த சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மொத்தம் 36 ரவுண்டுகள் அவர்கள் மீது சுடப்பட்டுள்ளது.

இந்த கொலை அம்மாநில காவல் துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் அத்திக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்பட்டது எப்படி?

துப்பாக்கி ஏந்திய போலீஸார் கொலையாளிகளுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை? குற்றவாளிகளான அத்திக் மற்றும் அஷ்ரப்பை பல்வேறு தருணங்களில் செய்தியாளர்கள் நெருங்க அனுமதித்தது ஏன்? என காவல் துறையை நோக்கி பல்வேறு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

பலமுறை செய்தியாளர்கள் நெருங்குவதை கவனித்த கொலையாளிகள், தாங்களும் செய்தியாளர்களை போல மைக், கேமராவும் கையுமாக வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அப்படி சென்றால்தான் கொலை செய்யப்பட்ட சகோதரர்களை நெருங்க முடியும் என அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

மூன்று பேர் சரண்: 

அத்திக் மற்றும் அஷ்ரப்பை கொலை செய்த பிறகு நொடி பொழுதில் கொலையாளிகள் மூவரும் காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர்.

சரண் அடைந்தவர்களின் பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி என தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சகோதரர்கள் இருவரையும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அவர்கள் மூவரும் முழக்கமிட்டதாகவும் தகவல்.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

அத்திக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க போலீஸார் கொடி அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

60 வயதான அத்திக் அகமது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004 வரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை எம்பியாகவும் (2004 முதல் 2009) பதவி வகித்துள்ளார்.

அவர் மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அத்திக் – ஷாயிஸ்தா பிரவீன் தம்பதியருக்கு அலி, உமர் அகமது, ஆசாத், அஹ்ஸான் மற்றும் அபான் என ஐந்து மகன்கள்.

இதில் அவரது மகன் ஆசாத் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

உமர் மற்றும் அலி ஆகியோர் சிறையில் உள்ளனர்.

அஹ்ஸான் மற்றும் அபான் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

அத்திக் அகமதுவின் மனைவியும் தலைமறைவாக உள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை: 

கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட்டோர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கிலும் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பினை வழங்கினார்.

இதன்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை அத்திக் தரப்பில் 6 பேர் பலி: 

உமேஷ் பால் கொலைக்கு பிறகு அத்திக் தரப்பில் இதுவரை 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, அத்திக்கின் மகன் ஆசாத் அகமது, உதவியாளர்கள் அர்பாஸ், விஜய் சவுத்ரி என்கிற உஸ்மான் மற்றும் குலாம் ஹாசன் என ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தகவல்: தி இந்து தமிழ்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *