செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல்
செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி கோரிக்கை வைத்து பேசினார்.
செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி சட்டப்பேரவையில் நேற்று வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தல் பிரசாரத்தில் செய்யாறை தலைமை இடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
முதலில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து போட்டியிட்ட தேர்தலில் தலைவர் கலைஞரும், செய்யாறு தொகுதியில் புலவர் கோவிந்தனாரும் வெற்றி பெற்றனர்.
திமுக தன்னுடைய முதல் தேர்தலையே செய்யாறு தொகுதி கழக கோட்டை என்பதை நிரூபித்தது. 1962ல் வருவாய் கோட்டமாக உருவாகி 61 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது.
மாவட்ட தலைநகருக்கு இணையாக அனைத்து மாவட்ட அலுவலகங்களும், தமிழகத்தில் அதிகமாக சுமார் 8000 மாணவர்கள் பயிலும் அரசு கலைக்கல்லூரி, செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐடிஐ), சார்பு நீதிமன்றங்கள், ஆசியாவிலேயே 2வது பெரிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, செய்யாறு சிப்காட்(பேஸ்1-3 என்ற அலகில்) சுமார் 5000 ஏக்கர் நிலம் கையக படுத்தப்பட்டு ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆதலால் செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
வெம்பாக்கம் ஒன்றியம் வடமணப்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.
புளியரம்பாக்கம்- அனக்காவூர் வழியே செய்யாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டி காஞ்சிபுரம், வந்தவாசி செல்வதற்கு உள் வட்டச்சாலை அமைத்துத் தர வேண்டும்.
வெம்பாக்கம் வட்டத்திற்கு அடிப்படை தேவையான தாலுகா காவல் நிலையம், மாவட்ட குற்றவியல், உரிமையியல் நீதிமன்றம், கருவூலம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும்.
சித்தாத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர வேண்டும்.
கொருக்கை கிராமத்தில் பெரணமல்லூர், ஆரணி சர்பதிவாளர் அலுவலகங்களில் இயங்கி வந்த பத்திரப்பதிவினை மாற்றி அதே செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட கொருக்கை கிராமத்திற்கு புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
தொகுதியில் தொழிலாளர் ஈட்டுறுதி(இஎஸ்ஐ) மருத்துவமனை, அரசு ஓட்டுநர் பயிற்சி மையம் (ஐஆர்டி) அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.