“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து”.. தெலுங்கானாவில் பாஜக வென்றவுடன் நடக்கும் – அமித்ஷா
“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து”.. தெலுங்கானாவில் பாஜக வென்றவுடன் நடக்கும் – அமித்ஷா
தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரங்கள் பங்கேற்பதற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்டை மாநிலமான தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
அது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். சட்டத்திற்கு புறம்பாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு ரத்து செய்யப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும்.” என்றார்.
தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய அமித்ஷா,
“தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது.
அரசு என்கிற காரின் ஓட்டுநராக மஜ்லிஸ் ஒவைசி இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும்.
கே சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.
சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார்.
2024 தேர்தலிலும் அந்த இடத்தை நரேந்திர மோடியே வைத்து இருப்பார். முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் தன்னுடைய இருக்கையில் தக்க வைப்பதில் கவனம் செலுத்தட்டும்.
நீங்கள் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை சண்டையிடுவதை நிறுத்த மாட்டோம். சந்திரசேகர் ராவால் மோடியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
தெலுங்கானாவில் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடைய விடாமல் பி.ஆர்.எஸ் அரசு தடுக்கிறது.
தெலுங்கானா அரசு பணிகளுக்காக நடத்தப்படும் TSPSC வினாத்தாள் கசிந்ததில் இருந்த முறைகேடுகள் உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்படும் என்றார்.
மே மாதம் தேர்தலை எதிர்கொள்ள உள்ள கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது வொக்காலிகா மற்றும் லிங்காயத்து பிரிவினருக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த கர்நாடக அரசை கண்டித்தது குறிப்பிடத்தக்கது