முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து- சிறுபான்மையினர் மீதான அமித்ஷா வன்மம்.. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு!
முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து- சிறுபான்மையினர் மீதான அமித்ஷா வன்மம்.. முதல்வர் ஸ்டாலின் கடும்தாக்கு!
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சிறுபான்மையினர் மீதான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வன்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி உள்ளார்
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத ரீதியான இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார்.
இதேபோல தெலுங்கானாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றார்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக பாஜக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.
இது தொடர்பாக உங்களில் ஒருவன் பதில்கள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
“சிறுபான்மை சமூகத்தினர் மீதான வன்மம்தான் இதன் மூலம் வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறுசொல்லியிருக்கிறார். இசுலாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திபடுத்தும் என பாஜகவினுடைய தலைமை அவர்களாகவே கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. பாஜகவிற்கு வாக்கு அளிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்ற மக்கள்.
பாஜக தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருக்கிறது, பொய்களையும் கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பாஜக ஆதரவு கணக்குகள்.பாஜகவினுடைய ஊது குழலாக மாறி, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை மறந்து பாஜகவை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள், இப்படியான சில காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது. மதசார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிற செயல்!
மக்கள் எல்லாவற்றைய்ம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! கோயபல்ஸினுடைய பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால் உண்மை மக்களுக்கு! இதுதான் வரலாறு சொல்கின்ற பாடம். நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம்” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.