தி கேரளா ஸ்டோரி ரிலீஸ் – எச்சரித்த உளவு பிரிவு – தயாராகும் தமிழ்நாடு அரசு
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ் – எச்சரித்த உளவு பிரிவு – தயாராகும் தமிழ்நாடுஅரசு
தி கேரளா ஸ்டோரி பட விவகாரம் குறித்து அலுவலர்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநில பெண்களை மையமாக வைத்து இது கேரளா ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் மே ஐந்தாம் தேதி அதாவது நாளை வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து கேரள மாநிலத்தில் பல எதிர்ப்பு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கேரளாவில் உள்ள ஐந்து இளம் பெண்கள் முஸ்லிமாக மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் பல எதிர்ப்பு கண்டனங்களைச் சந்தித்து வருகின்றன.
இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு உளவுப் பிரிவு காவல் துறையினர் அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழ்நாட்டில் நாளை திரையரங்குகளில் வெளியான பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்பினரும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டால் சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை யாரும் வாங்கி வெளியிடுவதற்கு முன் வரவில்லை. அதன் காரணமாக இந்த திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.
அப்படி படம் வெளியானால் சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து அதற்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள திரையரங்குகளில் விவரங்கள் குறித்து காவல்துறையினர் சேகரித்து வருகிறார்.
முன்னதாக இந்த திரைப்படம் குறித்து சினிமா ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இந்தத் திரைப்படம் ஒரு நச்சுத் தனமான அணுகுமுறை எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.