மணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு!
மணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு!
மோரே: மியான்மர் நாட்டின் எல்லை நகரமான மணிப்பூரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இம் மோதலில் தமிழர்களின் 25 வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இருந்த போதும் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலமானது மலைகளையும் சமவெளிகளையும் கொண்டது. மணிப்பூரில் பல்வேறு இன குழுக்கள் உள்ளன. நாகா, குக்கி, மைத்தேயி இனக் குழுக்கள் இம்மாநிலத்தில் மிக முக்கியமானவை. மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடியினர்- எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கை.
மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருதரப்பும் தங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் முன்வைத்து மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்துள்ளன. பல மாவட்டங்களில் குக்கி இனத்தவர், மைத்தேயி இனக்குழுவினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
இந்த மோதல், மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியது. மோரே நகரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். தமிழர்கள் மதிப்பும் மரியாதையுடனும் மோரே நகரில் செல்வாக்கு மிக்க சமூகமாகவும் இருந்து வருகிறது. தற்போதைய மோதலில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மைத்தேயி குழுவினரை இலக்கு வைத்து குக்கி இனத்தவர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களது வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வீடுகள், தேவாலயங்களை சுற்றி இருந்த தமிழர்களது வீடுகளும் எரிந்து சாம்பலாகின. தமிழர்களின் உணவகங்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாகின.
இது தொடர்பாக மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“தமிழர்கள் என்று தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தாக்கப்படவில்லை. இரு குழுக்களிடையேயான மோதலில் தமிழர்கள் சிக்கிக் கொண்டனர். இங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இணைய இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. செல்போன் சேவையும் தொடர்ச்சியாக கிடைப்பது இல்லை. தமிழர்கள் பதற்றத்திலும் துயரத்திலும் இருந்தாலும் அவர்கள் இலக்கு வைத்து தாக்கப்படவில்லை” என கூறினர்.
மணிப்பூர் ஆளுநர் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது