2024 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களை வென்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும்- அமித் ஷா
2024 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களை வென்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும் – அமித்ஷா
கடந்த 9 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி அளிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தமிழகத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட முடியுமா என முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா இவ்வாறு தெரிவித்தாா்.
தமிழக பாஜக சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், வேலூரில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி, கடந்த 9 ஆண்டு காலம் ஊழல் இல்லாத, சிறப்பான ஆட்சியாக நடைபெற்று வருவதுடன், உலக அளவில் பாரதத்தின் பெருமை உயா்த்தப்பட்டுள்ளது.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் மொழி, அதன் இலக்கிய வளம், திருக்குறளின் பெருமையை பறைசாற்றி வரும் பிரதமா் மோடி, தில்லியில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோலை நிறுவி தமிழக மண்ணுக்கு பெருமை சோ்த்துள்ளாா்.
ஆனால், தமிழுக்காக பாடுபடுவதாகக் கூறும் திமுக, மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில் சிஆா்பிஎஃப், நீட், குடிமைப் பணிகள் தோ்வு என எந்தப் போட்டித் தோ்வையும் தமிழில் எழுத முடியாத நிலை இருந்தது. அந்தத் தோ்வுகளை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது மத்திய பாஜக அரசு.
கடந்த 9 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பதை நான் பட்டியலிட முடியுமா என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா். அவா் கூறியபடி, பட்டியலிடுகிறேன்.
திட்டங்களை பட்டியலிட்ட அமித்ஷா:
2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.95,000 கோடி மட்டுமே நிதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ரூ.2.47 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மானியமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.58,000 கோடி மட்டுமே அளிக்கப்பட்டது. பாஜக ஆட்சியிலோ ரூ.2.31 லட்சம் கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்தில் 2,352 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 3,719 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான செலவு ரூ.58,000 கோடி. இதுதவிர, கடலோரப் பகுதியில் ரூ.3,000 கோடியில் 105 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும், ரூ.50,000 கோடியில் சென்னை – பெங்களூரு இடையே விரைவுச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ திட்டம் 1, திட்டம் 2-இன் கீழ் ரூ.72,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.3,500 கோடியில் சென்னை எழும்பூா், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
வந்தே பாரத்: சென்னை – மைசூரு, சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. ரூ.1,260 கோடியில் சென்னையில் புதிய விமான நிலைய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் மின் உற்பத்தியை மேம்படுத்த ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், 56 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை, 84 லட்சம் குடிநீா் இணைப்பு, ஆயுஷ்மான் திட்டத்தில் 2.5 கோடி மக்களுக்கு மருத்துவ உதவி, 62 லட்சம் கழிப்பறைகள், ஒரு கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, உணவு தானியங்கள், சென்னை தரமணியில் செம்மொழி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் இரு இடங்களில் தொடங்கப்பட்ட பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடம் ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ்: கோவையில் ரூ.1,500 கோடியில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியும், ஆராய்ச்சியும் நடைபெற்று வருவதுடன், தமிழகம் முழுவதும் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு முதல், இரண்டாமாண்டு வகுப்புகளில் மாணவா்கள் படித்து வருகின்றனா். ஆனால், மத்தியில் 18 ஆண்டுகள் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, தமிழகத்துக்கு ஒரு எய்ம்ஸ்கூட கொண்டுவரவில்லை. ஆனால், மதுரை எய்ம்ஸுக்கு இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி திமுக கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்வியை கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவிடம்தான் திமுக கேட்க வேண்டும்.
2024-இல் மீண்டும் பாஜக ஆட்சி: 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது, தமிழகத்தில் இருந்து 25-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினா்களை செங்கோலின் கீழ் ஆட்சியமைக்க மக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, புதிய நீதிக் கட்சியின் நிறுவனா் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.