தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் சோதனை நடத்தியதற்கு தேசியத் தலைவர்கள் கண்டனம்!
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் சோதனை நடத்தியதற்கு தேசியத் தலைவர்கள் கண்டனம்!
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்;
அமைச்சர் செந்தில்பாலாஜியில் வீட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம் என மோடி அரசு நினைக்கிறது.விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகள் மீது பயன்படுத்துவது மோடி அரசின் செயலாக இருக்கிறது.
எதிர்க்கட்சிகளை இதுபோன்ற தந்திரங்களின் மூலம் அமைதியாக்கிவிடமுடியாது. எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்குவதற்கான ஒன்றிய அரசின் -முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு தொடர்பாக மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; திமுகவுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
ரெய்டு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் ரெய்டுகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீரமைக்க முடியாத சேதத்தை நமது ஜனநாயகத்திற்கு பாஜக ஏற்படுத்துகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சோதனை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் சோதனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான குரலை நசுக்கும் மோசமான நோக்கத்துடன் செயல்படும் அமலாக்கத்துறை தற்போது தென் மாநிலங்களுக்கு சென்றுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.