அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பிரதமர் மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை – காங்கிரஸ் கடும் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பிரதமர் மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை காங்கிரஸ் கடும் கண்டனம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சரின் கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில்,
நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இது அரசியல் துன்புறுத்தல் மற்றும் பிரதமர் மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை. இந்த வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவு நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது.
அரசியல் நோக்கத்திற்காக கைது செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக காங். மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பாஜகவின் பழிவாங்கும் நோக்கம் என்று இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அத்துடன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்