செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்; ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்; ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு ஆகிய மனுக்களின் மீதான விசாரணையும் நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மீதான விசாரணை
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜாமீன் மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
“செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை” என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.
அமலாக்கதுறை சார்பில் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்து வருகிறார்.
“விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.” என அமலாக்கத்துறை சார்பில் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலையில் நடந்தது என்ன?
மதுவிலக்கு, மின்சாரம், ஆயத்தீர்வை ஆகிய துறைகளுக்கான அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார்.
நேற்று (13.6.2023) தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.
பின்பு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார்.
இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள்நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்றபெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.” என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” என உதயநிதி கூறினார். செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்; சட்டப்படி சந்திப்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நேற்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இரவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில் பாலாஜி கதறி அழுது துடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
தற்போது மருத்துவமனையைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை கோரியவர் ஸ்டாலின்தான் – அண்ணாமலை
செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர் மு.க.ஸ்டாலின்தான் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
“உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக சொல்லி செந்தில் பாலாஜி பணம் பெற்றுள்ளார் என்ற புகாரை வைத்துதான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தற்போது இதை எப்படி அரசியல் காழ்ப்புணர்வு என்று சொல்கிறார்கள்? இதை ஸ்டாலின்தான் விளக்கவேண்டும்..இதில் கடுகுஅளவு கூட அரசியல் காழ்ப்புணர்வு இல்லை. பாஜக நேர்மையாக செயல்படுகிறது” என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்த விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் நோடல் அதிகாரி மருத்துவர் ஆனந்த் குமார் விளக்கம் அளித்தார்.
அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் ரத்த அழுத்தம், இசிஜியில் ஏற்பட்ட மாறுதல்களைத் தொடர்ந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ அறிக்கை வெளியீடு
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரம் நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டது.
அந்த மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிகையில், “47 வயதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 10.40 மணியளவில் இருதய ரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது. அப்பரிசோதனையில், 3 முக்கியமான ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மாநில சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செந்தில் பாலாஜியை குறிவைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவரிடம் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது மனித உரிமைகளை மீறிய செயல். இதற்காக மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரது சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து டிஐஜி சரவண சுந்தர் ரோந்து பணி மூலம் கண்காணித்து வருகிறார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “இது முழுக்க முழுக்க திமுக அரங்கேற்றும் நாடகம். இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்தது. அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பது அவரது கடமை.
அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. அவரை தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு செந்தில் பாலாஜியை அவர் கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க சக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. மேற்குவங்கம், டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் என பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே புகார் கூறிவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி செய்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் வருமானவரிச் சோதனை நடந்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை ஆதரித்தார் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
யார் இந்த செந்தில் பாலாஜி?
ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.
கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.
அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.
இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.
2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.
கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.
அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
கட்சி சசிகலா – ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.
அந்த நேரத்திலேயே அதாவது 2017 ஏப்ரலிலேயே அவர் தி.மு.கவுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.
ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.
இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.
காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.
முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.
இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.