Politics

கிண்டி கிங் வளாகத்தில் ரூ. 240.54 கோடி செலவில் உலகத் தரத்தில், கூடிய மருத்துவ மனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிண்டி கிங் வளாகத்தில் ரூ. 240.54 கோடி செலவில் உலகத் தரத்தில், கூடிய மருத்துவ மனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்   

திறந்துவைத்து பேசும்போது:-

“ஒரு மனிதரின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு இருந்து, கணக்கிட வேண்டும் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்தவகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, நிறைவுற்றதற்குப் பின்னாலும் தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பயன்பட்டுக் கொண்டு இருக்கும் மாபெரும் தலைவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்த கிண்டி பகுதி, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது.

சைதாப்பேட்டை என்பது, கலைஞர் அவர்கள் நின்று, வென்ற தொகுதி. சைதாப்பேட்டை வேட்பாளர் திருவாளர் 11 லட்சம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிவிப்பு செய்தார்கள்.

எனவே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள். இந்த வளாகத்துக்கு கிங் இன்ஸ்டிடியூட் என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான். கலைஞர் என்றாலே ‘கிங்’ தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங் ஆகவும் கிங் மேக்கராகவும் இருந்தவர். அந்தவகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்துக்கு இதனை விடப் பொருத்தமான பெயரும் இருக்க முடியாது. பொருத்தமான இடமும் இருக்க முடியாது.

பதினைந்தே மாதத்தில் … மறுபடியும் சொல்கிறேன்… பதினைந்தே தத்தில்…  மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை!

2015-ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023-ஆம் ஆண்டுவரை இரண்டாவது செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு ஒரு செங்கல் கதை உங்களுக்கு தெரியும்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.

மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்குமான வேறுபாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கழக அரசு 6 முக்கிய  அறிவிப்புகளை வெளியிட்டது.

அதில் மிக முக்கியமானது, தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்பதாகும்.

மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி, கிங் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பின்னர் ஆயிரம் என உயர்த்தினோம். 2022, மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். அதாவது மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆறு தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனை வளாகம், மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

A – புற நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் நிர்வாகக் கட்டடம்,

B – அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு

C – எக்ஸ்ரே மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு எனஅமைக்கப்பட்டுள்ளது.

அடித்தளம் – மருந்துகள் சேமிப்பு அறை

தரைத்தளம் – அவசர சிகிச்சை பிரிவு

முதல் தளம் – அறுவை சிகிச்சை வார்டுகள்

2வது தளம் – பொது வார்டு, அறுவை சிகிச்சை அரங்குகள்

3வது தளம் – புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை பிரிவு

4வது தளம் – தனி அறைகள், ரத்த வங்கி

5வது தளம் – மயக்க மருந்தியல் பிரிவு

6வது தளம் – தொடர் சிகிச்சைக்கான வார்டுகள்.

10 அறுவை சிகிச்சை அரங்குகள், உயர்தர ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 மின் தூக்கிகள், சலவைக் கூடங்கள், உணவகங்கள், தீத்தடுப்பு கருவிகள் என நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பிரமாண்டமானதாக மிகப் பிரமாண்டமானதாக மிக மிகப் பிரமாண்டமானதாக கட்டித் தந்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் பாராட்டுகிறேன்.

உலகத் தரத்துடனும் மிகப் பிரமாண்டமாகவும் இதனை எழுப்ப வேண்டும் என்பதற்காக வாரந்தோறும் இங்கு வந்து ஆய்வு நடத்தி பார்த்துப் பார்த்துச் செதுக்கினார் என்பார்களே, அதைப் போலத் திட்டமிட்டுச் செய்து மக்கள் நல்வாழ்வுக் கோட்டையாக எழுப்பிக் காட்டி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்.

ஏவாமலேயே பணியாற்றக் கூடியவர் வேலு என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர் நம்முடைய வேலு அவர்கள். செயல்படுவதில் மாரத்தான் மந்திரி என்று என்னால் சொன்னால் அது மா.சு. தான். இவர்கள் இருவரும் சேர்ந்து கலைஞர் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

பொதுப்பணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், இதனைக் கட்டித் தந்த கட்டுமான நிறுவனம், அதன் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்களை `டாக்டர் கலைஞர்’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் மெடிக்கல் டாக்டர் அல்ல, சோஷியல் டாக்டர் – சமூக மருத்துவர் அவர். இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் நோய்களைத் தீர்த்து குணப்படுத்த வந்த சமூக மருத்துவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தனது அறிவாற்றலை, சிந்தனைத் திறனை மொழி ஆளுமையை, செயல் வேகத்தை, துணிச்சலை வாழ்நாளின் 95 வயது வரையிலும் தமிழ்ச்சமுதாயத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தியவர் கலைஞர் அவர்கள். “நான் கோட்டையில் இருந்தாலும் குடிசைகளைப் பற்றியே நினைப்பவன்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர் தலைவர்கலைஞர் அவர்கள்.

அவர் பெயரால் அமைந்த நூலகத்தை அடுத்த மாதம் மதுரையில் திறக்க இருக்கிறோம். இன்றைய தினம் அவர் பெயரால் மருத்துவமனை திறக்கப்படுகிறது. அவர் பெயரை எந்தத் திட்டத்துக்கும் வைக்கலாம். அந்த வகையில் அனைத்துக்கும் பொருத்தமானவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் நாள் தனது பிறந்தநாளை விளிம்பு நிலை மக்களுக்கான நாளாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தொடங்கும் நாட்களாக அதனைக் கொண்டாடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1971-ஆம் ஆண்டு ஜூன் 3 இல் ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்’ தொடங்கினார். 1972-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் ‘கண்ணொளித் திட்டம்’ தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் கை ரிக்‌ஷாவுக்கு பதிலாக இலவச சைக்கிள் ரிக்‌ஷா வழங்கும் திட்டத்தை தொடங்கினார். தலைவர் கலைஞர் எந்தளவுக்கு ஏழை – எளிய, விளிம்பு நிலை மக்களின் ஏந்தலாக இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்…

தலைவர் கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கை வரலாறாக ‘நெஞ்சுக்கு நீதி’ எழுதினார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகம் வெளியீட்டு விழா 1975-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் கலைவாணர் அரங்கில் நடப்பதாக ஏற்பாடு ஆனது. முதல் பாகத்தை வெளியிட அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார். நூலைப் பெற்றுக்கொள்ள அன்றைய தமிழ்நாடு ஆளுநர் கே.கே.ஷா அவர்கள் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். கடைசி நேரத்தில், இதோ இப்போது நடந்திருப்பதைப் போலவே, அப்போதும் குடியரசுத் தலைவரை வரவிடாமல் சிலர் தடுத்துவிட்டார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை தலைவர் கலைஞர் அவர்கள். விழாவைத் தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி நடத்தினார். தெரியுமா? நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தவர் கண்ணொளி அற்றவரும் தமிழ்நாடு விழி இழந்தோர் சங்கத்தலைவருமான ஆசீர் நல்லதம்பி! அவர்தான் தலைமை வகித்தார். நூலை வெளியிட்டவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரும் தொழு நோயாளிகள் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவருமான கவிஞர் முகமது அலி அவர்கள்! நூலை பெற்றுக் கொண்டவர் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான செல்வி சாந்தகுமாரி அவர்கள்! சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்து நூலை பெற்றுக் கொண்டார் சாந்தகுமாரி அவர்கள். இத்தகைய ஏழைப் பங்காளர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். குடியரசுத் தலைவர் அவர்கள் வரவில்லையே என்பதைக் குறிப்பிட்டு, “என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணி நேரம் நீடித்ததில்லை என்று கலைஞர் அவர்கள் எழுதினார். இப்படி பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் கலைஞர் அவர்களும் வளர்ந்தார். இப்போது நாமும் வளர்ந்துகொண்டு இருக்கிறோம். மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்க முடியாத அளவுக்கு சோதனைகள் வந்தாலும் 100 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் அவர்கள் பெயர் தமிழ்நாட்டில் நின்று நிலைத்துள்ளது. அவருக்கு சோதனைகள் கொடுத்தவர்கள் காலச்சக்கரத்தில் மறக்கப்பட்டு விட்டார்கள். கலைஞர் அவர்கள்தான் இன்னும் பல நூற்றாண்டு காலத்துக்கு நினைக்கப்பட்டு வாழ்வார். இந்த மருத்துவமனை என்பது பல்லாண்டுகளுக்கு மக்களைக் காப்பாற்ற இருக்கிறது. நம்மிடம் விட்டால் இதுபோன்ற மருத்துவமனையை ஆண்டுக்கு ஒன்று கட்டிக்காட்ட முடியும். அத்தகைய மருத்துவக் கட்டமைப்பு உள்ள மாநிலம் நமது தமிழ்நாடு!

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ‘மெடிக்கல் சிட்டி’ என்றுதான் சென்னைக்குப் பெயர். நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக, ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கி இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் இலவசமாக உயர்சிகிச்சை பெற்று உயிர்பிழைக்க வழிவகுத்த மனிதநேயர்தான் நம் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல, 1989-ஆம் ஆண்டே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரில் ஏழைக் கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு நிதி உதவித்திட்டத்தைத் தொடங்கியவரும் தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர்தான்.

2015-ஆம் ஆண்டு, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பெட்டகத் திட்டமானாலும், அம்மா கர்ப்பிணித் தாய்மார்கள் நல பெட்டகத் திட்டமானாலும் எந்தவித அரசியல் காழ்ப்பும் இன்றி இப்போதும் நமது அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. அதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குக் காட்டிய வழி. யார் செய்திருந்தாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமானால் அதை அரசியல் பார்வையோடு பாழாக்காமல், இன்னும் செழுமைப்படுத்துவதுதான் பேரறிஞரின் தம்பியான தலைவர் கலைஞரின் பாணி.

கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்கள். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற சிந்தனையை முதன்முதலாக விதைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான். மா.சு. சொன்னாரே, இப்போது நாம் ‘மக்களைத் தேடி மருத்துவம்‘, ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48‘ போன்ற நாட்டிற்கே பல முன்மாதிரியான மருத்துவத் திட்டங்களை வகுத்து செயல்படும் திறன் உலகம் முழுவதும் பல சுகாதார ஆர்வலர்களை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நாட்டிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், இந்தக் கல்லூரிகளில் சுமார் 5050 MBBS இடங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது. 1999-ஆம் ஆண்டு ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள்தான் தொடங்கினார். ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டமாக இன்றுவரை அது செயல்பாட்டில் உள்ளது. ஏழை – எளிய மக்களுக்கு இந்த முகாம்கள் பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 1,502 முகாம்கள் நடத்தப்பட்டு 14 லட்சத்து 79 ஆயிரத்து 732 பேர் பயனடைந்துள்ளார்கள். 108 ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தியும் செயல்பட்டு வருகிறது. இருசக்கர அவசர கால ஊர்தியும் நடமாடும் மருத்துவப் பெட்டகமும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1,760 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக ஆதரவின்றி தவிக்கும் 1,320 குழந்தைகளுக்கு சிறப்பு என்ரோல்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 1,414 செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக வருமான வரம்பின்றி சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடியே 46 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். தேசிய நல திட்டங்களை செயல்படுத்துவதில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இப்படி மக்கள் நல அரசாக மக்களைக் காக்கும் அரசாக மக்கள் நல்வாழ்வு அரசாக தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தலைவர் கலைஞர் அவர்களும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றினார்.

அவர் வழியில் நாங்களும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்ய நினைக்கும்போதெல்லாம் அதற்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தி நம்மை திசை திருப்பி நன்மைகளைத் தடுக்கப் பார்ப்பார்கள். அதற்காக டைவர்ட் ஆக மாட்டோம். மக்கள் நலன் ஒன்றே எனது இலக்கு என்ற நேர்வழியில் பயணிப்போம்.

நான்கு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவள், அதில் எந்தக் குழந்தை மெலிந்து இருக்கிறதோ அந்தக் குழந்தையையே அதிகம் கவனிப்பாள். அப்படி மெலிந்த குழந்தைகளைக் காக்கும் அரசு எமது அரசு என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அதையேதான் இன்றைய திராவிட மாடல் அரசு பின்பற்றுகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல – கலைஞரின் மகன் என்ற பூரிப்பு உணர்வோடு இதனைத் திறந்து வைத்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதை சொன்னால் நமது நீர்வளத்துறை அமைச்சருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பலமுறை இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இவர்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத பலரும் சிகிச்சைக்காக வருவதாலும்அவர்களுடன் வருபவர்கள் வேலூரில் தங்குவதற்கு, குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவரப்பட்டது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தினை கடைபிடிக்கும் நமது அரசு, இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திராவிட மாடல் அரசின் அங்கங்களாக உள்ள எங்கள் அனைவரையும் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்தியாக தலைவர் கலைஞர் தான் இருக்கிறார். அவர் பெயரை உச்சரிக்கும் போதே ஓராயிரம் மடங்கு பலம் பெறுகிறோம். அந்த பலத்தில் எங்களது பயணத்தைத் தொடர்வோம்,’’
என்று பேசினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *