FEATURED

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 

ஆளுநர் ஆர்.என்.ரவி:

‘தமிழக மக்களுக்கு, குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு, மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள். பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மை உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்பமாக அமைதியான, ஆத்ம நிர்பர் பாரத் மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம்.’ என கூறியுள்ளார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்:

‘சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள் பிறகு நண்பர்கள் அடுத்துதான் தங்களுக்கு… ” தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து,பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

‘உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு,இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.’

தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.:

‘தியாகத் திருநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கொடுங்கோலன் நம்ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத்தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

மேலும்,இறைத்தூதர் இஸ்மாயீல் தம் இளமைக் காலத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மனவுறுதியுடன் சந்தித்து சாதனை படைக்க உறுதுணையாக நின்றவர் அவரது அருமை அன்னை ஹாஜரா. கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் அடக்குமுறைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்வதற்கு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, அன்னாரது குடும்பத்தினரின் தியாக வாழ்வியல் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தான் ஹஜ் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது.

தியாகத் திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் கடந்த இரு மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாசிச சூழ்ச்சிக்குப் பலியாகி நிம்மதி இழந்து நிற்கும் அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும், இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.’

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ :

‘உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள். திரு குர்ஆனில் ஆறு அத்தியாயங்களில், 32 வசனங்களில், குறிப்பாக 24 தலைப்புகளில் ஹஜ் யாத்திரை பேசப்படுகிறது.

இறைவன் இப்ராஹீம் (அலை) தியாகத்தை ஏற்று இஸ்மாயில் (அலை) க்கு பதிலாக ஆட்டை   பலியிடுமாறுகட்டளையிட்டார்.

(திரு குர் ஆன் 37, வசனம் 100-111) அவ்வசனங்களுக்கேற்ப உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். “

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:

‘உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்துத்வா கோட்பாடுகளை பின்பற்றி, அனைத்து நிலைகளிலும் புகுத்துவதன் மூலம் 20 கோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த 45 நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.

சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. வெறுப்பு பேச்சின் மூலம் வகுப்புவாத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. மதரீதியில் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அனைவரையும் சமமாக நடத்துவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.’

செல்வபெருந்தகை:

‘அன்றாட வாழ்வில் நாம் வாழ்க்கை நெறிகளாகக் கடைப்பிடிக்கக்கூடிய எளிய, உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய சுயநலத்திற்காக பிறரை பலி கொடுக்கும் இவ்வுலகில், தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் அர்ப்பணிப்பை, தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவரது வழியில் அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இந்த நன்னாளில் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவரும்ஏற்றத்தையும், இன்பத்தையும், மன அமைதியையும் பெற்று வளமுடன் வாழ எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சிறுபான்மை மக்களின் நலன்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றி, நாட்டு மக்களுக்கு ஏற்றம் தரும் நல்லாட்சி மலரவேண்டும். மேலும், வரும் நாட்களில் மத நல்லிணக்கமும், ஈகை புரிதலும், மனிதநேயமும் தழைக்கட்டும். நமது அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட வேண்டுமென மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *