ராகுல் விவகாரம்: இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம்! தேதியை அறிவித்த காங்கிரஸ்
ராகுல் விவகாரம்: இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம்! தேதியை அறிவித்த காங்கிரஸ்
டெல்லி: அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
இதனை ரத்து செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இந்தியா முழுவதும் மவுன போராட்டம் நடத்துவதற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்தார்.
இதனால் அவர் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதாவது வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கிய லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியபோது இவ்வாறு கூறினார்.
இது பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மோடி மற்றும் மோடி சமுகத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவர் தண்டனையை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது அவரது தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
இந் நிலையில் தான் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அனைத்து மாநில தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனை ரத்து செய்யப்படவில்லை. இந்த சூழலில் உண்மை மற்றும் நீதிக்காக ராகுல் காந்தி போராடி வருகிறார்.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி தனியாக இல்லை என்பதை நாம் உணர்த்த வேண்டும். அவரோடு பல லட்சம் காங்கிரஸ் கட்சியினரும், மக்களும் இருப்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.
இதனால் அனைத்து மாநில தலைவர்களும் ஜூலை 12 ம் தேதி காலை மாநில தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை முன்பு மவுன சத்தியாகிரஹம் (மவுன போராட்டம்) நடத்த வேண்டும்.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
இதில் மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.