Politics

’சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ புள்ளிவிவரத்துடன் திமுகவை விளாசும் எடப்பாடி பழனிசாமி

’சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ புள்ளிவிவரத்துடன் திமுகவை விளாசும் எடப்பாடி பழனிசாமி

“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அதிமுக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி பேசினார்

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று மகாகவி பாரதி பாடிய நம் தாய் திருநாட்டில், இந்த விடியா தி.மு.க-வின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கு காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும்.

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு, சுத்தியால் வெட்டிக்கொலை, செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்மை கருதி வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன

இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஊடகங்களில் வெளிவந்த குற்றச் சம்பவங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

1.ஆளும் கட்சியின் கடலூர் சட்டமன்ற உறுப்பினர், நல்லாத்தூர் கிராமத் தனது நிர்வாகியின் இல்ல விழாவிற்கு சென்றபோது, பெட்ரோல் குண்டு வீசிய பரபரப்பு சம்பவம்.

2.செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வழக்கிற்காக வந்த லோகேஷ் என்பவரை பெட்ரோல் குண்டு வீசி ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம்.

3. கடலூர் இம்பிரியல் சாலையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

4. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிபட்டியில், டிஜிட்டல் விளம்பர போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

5. அரசியல் கட்சியைச் சேர்ந்த நகரச் செயலாளர் நாகராஜ், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இரவு நின்று கொண்டிருந்தபோது சமூக விரோத கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

6.கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் டாஸ்மாக் கடையின் விற்பனை பணம் சுமார் 6:50 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க, மேற்பார்வையாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களை கொடூர ஆயுதங்களால் வெட்டிய சம்பவம்.

7.திருச்சி, முசிறி வட்டம், சுக்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தீபக் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை.

8. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி பிரிவு சாலையில் குப்புசாமி மற்றும் அவரது மகன் மாரிமுத்து ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலால் கொடிய ஆயுதங்களால் வெட்டி குப்புசாமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

9. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, ஜூஜூவாடி பாலாஜி நகரை சேர்ந்த விவசாயி திரு. சிவராம் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மிளகாய்பொடி தூவி அரிவாளால் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.

10.சென்னையில் கல்லூரி மாணவி அஸ்மிதா நந்தம்பாக்கம் ஏழு கிணறு தெருவில் நடந்து வந்தபோது நவீன் என்பவன் கத்தியால் குத்தி படுகாயம்.

11. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்த பூசாரி திரு. காமராஜ் அவர்களை வழிமறித்து, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை.

12. திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே முன் விரோதம் காரணமாக
விவசாயி திரு. அருணாசலம் என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால்
வெட்டிப் படுகொலை.

13. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி திருமதி வளர்மதி அவர்கள் நகைக்காக படுகொலை.

14. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக பிரகாஷ் என்பவர் கல்லால் அடித்து கொலை,

சென்னை புறநகர் இரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற 22 வயது இளம் பெண்ணிடம் வழிப்பறி திருடர்கள் செல்போனை பறிக்க முயன்றபோது, பிரீத்தி இரயிலில் இருந்து தள்ளப்பட்டு கொலையான சம்பவம். ஒரு செல்போனுக்காக 22 வயது இளம் பெண்ணின் உயிர் பலியான சம்பவம் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போதைப் பொருள் விற்பனை, முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று பேட்டியின் வாயிலாகவும், அறிக்கைகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் நான் எடுத்து வைத்து வருகிறேன். எனினும், இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர், இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், அம்மாவின் அரசில் எப்படி காவல் துறை சட்டப்படி, சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறினார்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *