அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இவர் 2015 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.127.49 கோடி சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.
தஞ்சாவூரில் காமாட்சி மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் நவீன பன்நோக்கு மருத்துவமனையை காமராஜ் கட்டியுள்ளார்
கடந்த 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021 மார்ச் 31 வரை காமராஜ் அமைச்சராக இருந்தபோது, அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் புகார் அளித்ததை விட இருமடங்கு சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக காமராஜ் தொடர்புடைய 51 இடங்களில் கடந்த ஆண்டு ஜூலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கின் அடிப்படியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அவர்களிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தில் காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார், மகன்களான இனியன், இன்பன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பெட்டி பெட்டியாக 18,000 ஆவணங்கள் திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.